×

சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கே.சாமிதுரை மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சாமிதுரை மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே. சாமிதுரை (வயது 91) மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். எளிய பின்புலத்தில் பிறந்து, கடும் உழைப்பால் உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்து சட்டத்தின் துணையுடன் சமூகநீதியை நிலைநாட்டியவர் சாமிதுரை. முதன்முறை உயர்நீதிமன்ற நீதிபதி ஆகும் வாய்ப்பு வந்தபோது அதனை மறுத்த, பதவி மேல் ஆசைகொள்ளாத அரிய மனிதர் அவர். பின்னர் இரண்டாம் முறை வாய்ப்பு வந்தபோதுதான் மரபு கருதி அதனை ஏற்றுக்கொண்டார்.

2018-ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தலைவர் கலைஞரின் புரட்சிகரமான பங்களிப்புகளை அவர் பட்டியலிட்டதும், அப்போதே என் மீது மிகுந்த அன்பும் நம்பிக்கையும் கொண்டு, “வருங்கால முதலமைச்சர்” என அழைத்ததும் என் நெஞ்சில் நீங்காமல் நிழலாடுகிறது. ஜஸ்டிஸ் சாமிதுரை அவர்களை இழந்து வாடும் அவரது கொள்கை வழித்தோன்றல் கேரள உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி – கேரள மனித உரிமை ஆணையத்தின் தற்போதைய தலைவர் எஸ். மணிக்குமார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கே.சாமிதுரை மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chennai Icourt ,K. ,Chief Minister ,Mukheri ,Samiturai ,Stalin ,Chennai ,Chennai High Court ,K.K. ,G.K. Stalin ,Former ,Judge ,K. Chief Minister ,
× RELATED நிவாரண பணிகளில் மக்கள் பிரதிநிதிகள்...