×

சிலி நாட்டில் பிறந்த உடனேயே கடத்தப்பட்டு விற்பனை: 42 வயதில் முதன்முறையாக தாயை சந்தித்த மகன் நெகிழ்ச்சி

சிலி: சிலி நாட்டில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டவர் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் தனது தாயை முதன் முறையாக சந்தித்துள்ளார். மகன் உயிருடன் இருப்பதே தெரியாமல் இருந்த தாய் மகனை சந்தித்த போது கண்ணீர் விட்ட காட்சி அனைவரையும் நெகிழவைத்தது. தென் அமெரிக்க நாடான சிலியில் 1973 முதல் 1990 வரை சர்வாதிகார ஆட்சி நடந்தது. அந்த காலகட்டத்தில் மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர் கதையாக இருந்தது.

அந்த வகையில் 42 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டவர் ஜிம்மி லிப்பர்ட் தைடன். சிலி நாட்டின் பல்ஜிரியா பகுதியில் பிறந்தவர் ஜிம்மி. அவர் பிறந்த உடனேயே அவரை கடத்தி சென்றுள்ளனர். அமெரிக்காவில் குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு அவரை விற்றுள்ளனர். அவர்கள் பராமரிப்பில் வளர்த்த ஜிம்மி தற்போது வழக்கறிஞராக உள்ளார். மனைவி, குழந்தை என அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும் சிறுவயதில் இருந்தே தான் சட்டவிரோதமாக தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்பதை அறிந்தே அவர் வளர்ந்துள்ளார். எனவே தனது பெற்றோரை தேட தொடங்கி இருக்கிறார். அவருக்கு அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தனியார் தொண்டு நிறுவனம் உதவி உள்ளது.

இதுபோன்ற கடத்தப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தை சென்று சேர்க்கும் பணியில் ஈடுப்பட்டு வரும் அந்த நிறுவனம் மூலம் சிலியில் தனது தாய் நாடு என்பதை ஜிம்மி அறிந்து கொண்டார். பின்னர் தனது தாய் மரியா ஏஞ்சலிகா உயிருடன் இருப்பதையும் டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்தார். இதனை தொடர்ந்து குடும்பத்துடன் அவர் புறப்பட்டு தாயை பார்க்க சென்றார். பிறந்தவுடன் குழந்தை இறந்து விட்டதாக கூறியதால் அந்த வேதனையில் 40 ஆண்டுகளை கழித்துள்ளார் மரியா. தற்போது தனது மகன் வளர்ந்து வழக்கறிஞராக வந்து நின்றதை கண்டு அவர் நெகிழ்ச்சியடைந்தார்.

The post சிலி நாட்டில் பிறந்த உடனேயே கடத்தப்பட்டு விற்பனை: 42 வயதில் முதன்முறையாக தாயை சந்தித்த மகன் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chile ,Leschi ,
× RELATED பூத் சிலிப் மட்டும் இருந்தால் போதாது;...