×

‘பிரக்யான்’ ரோவர் வெளியிட்ட புது தகவல் நிலவின் மேற்பரப்பில் கந்தகம் இருக்கு… ஹைட்ரஜன் உள்ளதா?: இஸ்ரோ அறிவிப்பு

பெங்களூரு:‘பிரக்யான்’ ரோவர் வெளியிட்ட புது தகவலின்படி நிலவின் மேற்பரப்பில் கந்தகம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதாகவும், ஹைட்ரஜன் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 14ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் -3 இன் ‘விக்ரம்’ லேண்டர் 40 நாள் பயணத்திற்குப் பிறகு கடந்த 23ம் தேதி நிலவின் மேற்பரப்பில் தனியாக தரையிறங்கியது. இதையடுத்து, ‘விக்ரம்’ லேண்டரில் இருந்து ‘பிரக்யான்’ ரோவர் வெளியே வந்து நிலவில் ஆராய்ச்சியை துவக்கியுள்ளது. தற்போது சந்திரயான்-3 பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி நிலவின் தென் துருவ மேற்பரப்பில் ஆக்ஸிஜன் உட்பட சில தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ‘பிரக்யான்’ ரோவரில் உள்ள லேசர் தூண்டப்பட்ட பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி (எல்ஐபிஎஸ்)
கருவியானது, நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளது. செப்டம்பர் 3ம் தேதி வரை லேண்டரும், ரோவரும் ஆய்வு பணியில் ஈடுபடும் என்று எதிர்பார்ப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட பதிவில், ‘ரோவரில் உள்ள எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோகிராப் மற்றும் லேசர் ஸ்பெக்ட்ரோகிராப் துணையுடன் தென்துருவத்தில் கந்தகம் (தனிமம்) இருப்பதை ரோவர் உறுதி செய்துள்ளது. ஹைட்ரஜன் (எச்) இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. கந்தகம் மட்டுமின்றி, எதிர்பாரத்தப்படியே அலுமினியம் (AI), சல்பர் (S), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr), டைட்டானியம் (Ti), மாங்கனீஸ் (Mn), சிலிக்கான், ஆக்ஸிஜன் (O) ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளது.

The post ‘பிரக்யான்’ ரோவர் வெளியிட்ட புது தகவல் நிலவின் மேற்பரப்பில் கந்தகம் இருக்கு… ஹைட்ரஜன் உள்ளதா?: இஸ்ரோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : ISRO ,Bengaluru ,Dinakaran ,
× RELATED குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி...