×

ஐஓசி நிறுவனம் சார்பில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ரூ.19 லட்சம் செலவில் நவீன கருவி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

தண்டையார்பேட்டை: ஐஓசி நிறுவனம் சார்பில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ரூ.19 லட்சத்தில் நவீன கருவியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். மருத்துவமனைக்கு அல்ட்ரா சவுண்ட் எனும் நவீன கருவி வாங்கவேண்டும் என வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். பொதுமக்களின் கோரிக்கை ஏற்று, ஐஓசிஎல் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி சிஎஸ்ஆர் நிதி மூலம் ரூ.19 லட்சம் செலவில் அல்ட்ரா சவுண்ட் எனும் நவீன கருவி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வாங்கப்பட்டுள்ளது.

இந்த நவீன கருவியை ஸ்டான்லி அரசு மருத்துவமனை நிர்வாகிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, அல்ட்ரா சவுண்ட் எனும் நவீன கருவியை மருத்துவமனை பயன்பாட்டுக்காக நிர்வாகிகளிடம் வழங்கி துவக்கி வைத்தார். இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, “இந்த கருவி மூலம் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படும்” என்றனர். நிகழ்ச்சியில், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, சென்னை மாநகர மேயர் பிரியா, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, மாநகராட்சி நிலைக்குழு தலைவர் இளைய அருணா, மாமன்ற உறுப்பினர்கள் கீதா சுரேஷ், நவீன், திமுக பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ். செந்தில்குமார், மருத்துவமனை முதல்வர் பாலாஜி மற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

The post ஐஓசி நிறுவனம் சார்பில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ரூ.19 லட்சம் செலவில் நவீன கருவி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : IOC ,Stanley Government Hospital ,Minister ,M. Subramanian ,Thandaiyarpet ,Chennai ,Dinakaran ,
× RELATED போக்சோ வழக்கில்...