திருத்தணி: திருத்தணி, திருவாலங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரும்பு விவசாயம் செய்துவரும் விவசாயிகள் பெருமளவில் காட்டு பன்றிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரும்புகளை பன்றிகள் தின்றுவிடுவதால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் காட்டு பன்றிகளை விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள விரிஞ்சிபுரம் அறிவியல் நிலையத்தில் காட்டுப்பன்றியை விரட்ட மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை தமிழக அரசு 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் காந்தி தலைமை வகித்து 20 விவசாயிகளுக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார். கூட்டுறவு தனி அலுவலர் மலர்விழி வரவேற்றார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், சந்திரன் எம்எல்ஏ முன்னிலை வகித்தனர். திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.மகாலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயபாரதி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் களம்பாக்கம் பன்னீர்செல்வம், மீனவரணி அமைப்பாளர் ஞானமூர்த்தி, ஒன்றிய அவைத்தலைவர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் நந்தகுமார் கலந்துகொண்டனர்.
விழாவில் அமைச்சர் காந்தி பேசும்போது, ‘’திமுக ஆட்சி எப்போதெல்லாம் நடக்கிறதோ அப்போதெல்லாம் விவசாயிகளுக்கு தேவையான திட்டங்கள் செய்து வருகிறது. திமுக ஆட்சி எப்போதும் விவசாயிகளுக்கு துணை இருந்துவருகிறது. நானும் ஒரு விவசாயியாக இருந்து வருவதால் விவசாயிகளின் கஷ்டங்கள் எனக்கு தெரியும். விவசாயிகள் கஷ்டங்களை போக்குவதுதான் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடமையாக உள்ளது’ என்றார். விவசாயிகள் கூறும்போது, ‘’காட்டு பன்றிகளால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இதனை தடுக்கும்விதமாக 50 சதவீத் மானியத்தில் காட்டுப்பன்றி விரட்டி மருந்து வழங்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் கரும்புகளை பாதுகாப்பதுடன் நஷ்டம் அடைவதையும் தவிர்க்க முடியும். எங்களுக்கு 2 கரும்பு அறுவடை இயந்திரம் வழங்கியதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றனர்.
* பயன்படுத்துவது எப்படி?
சுற்றுச்சூழலுக்கு தீங்குவிளைவிக்காத பன்றி விரட்டி உயிர்மருந்தை வயல்வெளியை சுற்றி கம்பி கட்டி சுமார் ஒன்றரை அடி உயரத்தில் மருந்து நிரப்ப வேண்டும். இந்த மருந்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை நிரப்ப வேண்டும். இந்த மருந்து வைப்பதால் காட்டு பன்றிகளின் தொல்லைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த மருந்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு கிடையாது.
The post தோட்டத்தில் கரும்புகளை பாதுகாக்க 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு காட்டுப் பன்றி விரட்டி மருந்து: அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.