×

மூதாட்டியை சரமாரியாக தாக்கி 6 சவரன் நகைகள், பணம் கொள்ளை ஜட்டி கொள்ளையர்கள் அட்டூழியம்: கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே வீட்டினுள் புகுந்த ஜட்டி கொள்ளையர்கள், மூதாட்டியை சரமாரியாக தாக்கி 6 சவரன் நகை, பணத்துடன் தப்பிவிட்டனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த துராபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவரது மனைவி துர்கா (38). இவர்கள் அந்த பகுதியில் சமீபத்தில்தான் வீடு கட்டி குடியேறினர். இவர்களுக்கு சந்தோஷ் (15) என்ற மகன், சாருலதா (13) என்ற மகள் உள்ளனர். நேற்றிரவு ரமேஷ் வேலைக்கு சென்றுவிட்டதால் துர்கா தனது குழந்தைகள் மற்றும் பாட்டியுடன் இருந்தார். நேற்றிரவு வீட்டின் கதவை பூட்டாமல் அனைவரும் தூங்கியதாக தெரிகிறது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டின் உள்ளே புகுந்த 3 பேர், பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பூஜை அறையில் இருந்த ெள்ளித்தட்டு, விளக்கு உள்ளிட்ட பொருட்களையும் பணத்தையும் கொள்ளையடித்து உள்ளனர். இதன்பின்னர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த துர்காவின் கழுத்தில் இருந்த செயினை நைசாக கழற்ற முயன்றபோது அவரது அருகில் படுத்திருந்த மூதாட்டி திடுக்கிட்டு எழுந்து மர்ம நபர்கள், உடல் முழுவதும் எண்ணெய் பூசியபடி ஜட்டியுடன் நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த கொள்ளையர்கள், கொண்டுவந்திருந்த பீர்பாட்டில்கள், செங்கற்களால் மூதாட்டியை சரமாரியாக தாக்கிவிட்டு நகை, பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதனிடையே துர்கா எழுந்தபோது மூதாட்டி காயங்களுடன் கிடப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கொள்ளை நடந்தது பற்றி அறிந்ததும் ஊர்மக்கள் திரண்டுவந்தனர். இதன்பின்னர் அவசர காவல் எண் 100க்கு தகவல் தெரிவித்ததும்ஆரம்பாக்கம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதுசம்பந்தமாக ரமேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குபதிவு செய்து உள்ளனர். தடயவியல் நிபுணர்கள் பீரோ, கதவுகளில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்து எடுத்துச் சென்றனர். கொள்ளையர்களை பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வீட்டில் இருந்து 6.5 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய் கொள்ளைப்போனது தெரியவந்துள்ளது.

The post மூதாட்டியை சரமாரியாக தாக்கி 6 சவரன் நகைகள், பணம் கொள்ளை ஜட்டி கொள்ளையர்கள் அட்டூழியம்: கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kummippundi ,Gummidipundi ,Gummipundi ,Gummikondi ,
× RELATED உடல் நலக்குறைவால் காலமான...