×

இந்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாது என்பதால்: ‘அக்சாய் சின்’ பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் சீனா

* புதிய வரைபட சர்ச்சைக்கு மத்தியில் ‘சேட்டிலைட்’ போட்டோ வெளியானது

புதுடெல்லி: லடாக்கில் விமானப்படை தளங்களை இந்தியா அமைத்துள்ளதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘அக்சாய் சின்’ பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. புதிய வரைபட சர்ச்சைக்கு மத்தியில் மற்றொரு அதிர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது. இந்திய – சீன எல்லைப் பகுதியில் இருக்கும் மாநிலமான அருணாச்சலப் பிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்தாலும்கூட, சீனாவின் அத்துமீறல் நடவடிக்கையால் அவ்வப்போது பதற்றமான சூழலில் இருக்கும். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் அருணாச்சல பிரதேசத்தின் 11 இடங்களுக்கு `தெற்கு திபெத்’ என்று சீனா பெயர் மாற்றம் செய்தது. இந்நிலையில், சீனாவின் இயற்கை வள அமைச்சகம், சீனாவின் நிலையான வரைபடத்தின் 2023 பதிப்பை வெளியிட்டது. அதில், அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் (சீனாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி) முழுவதும் சீனாவின் எல்லைக்குள் இருப்பதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், சீனாவிடமிருந்து பிரிந்து தனி நாடாக இருக்கும் தைவானையும், தென்சீனக் கடலின் பெரும்பகுதியான, சர்ச்சைக்குரிய எல்லைக் கோடையும் சீனா சொந்தம் கொண்டாடியிருப்பது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சீனாவின் புதிய வரைபட விவகாரத்துக்கு மத்தியில், வடக்கு லடாக்கின் டெப்சாங் சமவெளிக்கு கிழக்கே அறுபது கி.மீ தொலைவில் அமைந்துள்ள பள்ளத்தாக்கின் ஓரத்தில் தற்போது சீன ராணுவம் சுரங்கப்பாதையை அமைத்து வருகிறது. சீன வீரர்கள் தங்குவதற்கும், ஆயுதங்களை பதுக்கி வைப்பதற்கும் இந்த நிலத்தடி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியானது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தாலும், தற்போது அந்த பகுதியானது (அக்சாய் சின்) சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதாவது இந்திய – சீன எல்லை கோட்டுக்கு கிழக்கே அமைந்துள்ளது. தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, நிலத்தடி சுரங்கப்பாதை தொடர்பான ‘சேட்டிலைட்’ புகைப்படங்களை ஆய்வு செய்த சர்வதேச புவி – உளவுத்துறை நிபுணர்கள், பள்ளத்தாக்கின் இருபுறமும் இருக்கும் பாறைகள் தோண்டப்பட்டுள்ளது. குறைந்தது 11 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்தின் பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க முடியாது என்பதால், சீனா தற்போது சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செயற்கைக்கோள் பட நிபுணர் டேமியன் சைமன் கூறுகையில், ‘இந்திய விமானப்படையின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் எல்லைக் கோட்டுக்கு அருகே உள்கட்டமைப்பை சீனா மேம்படுத்துகிறது. அதன் ஒருபகுதியாக சுரங்கப்பாதை மற்றும் பதுங்கு குழிகளை அமைக்கிறது’ என்றார். அதேபோல் இந்திய ட்ரோன் ஸ்டார்ட்-அப் நியூஸ்பேஸ் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சமீர் ஜோஷி கூறுகையில், ‘கல்வான் மோதலுக்குப் பிறகு, இந்திய ராணுவம் சீன எல்லையில் துருப்புகளை அதிகரித்துள்ளது. எவ்வித தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. தற்போது எல்லையில் சீனா மலைகளை ஆக்கிரமித்து வருவதும், இந்தியாவின் பதிலடி தாக்குதல் திறனும் ஒன்றுக்கொன்று நேரடி தொடர்புடையது’ என்றார். இந்திய – சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் வரும் செப். 9, 10ம் தேதிகளில் ெடல்லியில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சீனாவின் ஆக்கிரமிப்பு வரைபடம், ஆக்கிரமிப்பு விவகாரங்கள் பேசப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

* நம்மால் பதிலடி தரமுடியாதா?

சீனா வெளியிட்ட புதிய வரைபடம் குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ‘இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல; அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. கடந்த 1950ம் ஆண்டில் இருந்தே சீனா இதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இவ்வாறான அபத்தமான புகைப்படங்களை வெளியிடுவதால், மற்றவர்களின் (இந்தியா) நிலம் உங்களுடையதாகிவிடாது’ என்றார். அமைச்சரின் கருத்துக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், ‘சீனா புதிய வரைபடத்தை வெளியிடுகிறது என்றால், நம்மால் அதுபோன்று ஏன் முடியாது? அமைச்சர் ஜெய்சங்கர் சொல்வது சரிதான். சீன பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் திபெத்தியர்களுக்கு, நாம் ஏன் ஸ்டேபிள் விசாக்களை வழங்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

The post இந்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாது என்பதால்: ‘அக்சாய் சின்’ பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் சீனா appeared first on Dinakaran.

Tags : China ,Aksai Chin ,New Delhi ,India ,Ladakh ,Dinakaran ,
× RELATED சீனாவில் குழந்தைகளுக்கு பரவும் புதிய...