×

திருக்குறளில் எழுத்தலங்காரம்…

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருவள்ளுவர் தமிழ் எழுத்துகளைப் பெரிதும் நேசிப்பவர். எழுத்துகளால் ஆன வார்த்தைகளின் பொருளில் மட்டுமல்ல, அந்த வார்த்தைகளை உருவாக்கும் எழுத்துகள் மேலும் அவருக்கு நாட்டம் இருந்திருக்கிறது. அதனால்தான் தமிழின் முதல் எழுத்தான `அ’ என்ற உயிரெழுத்தில் தம் திருக்குறளைத் தொடங்கியவர், தமிழின் இறுதி எழுத்தான `ன்’ என்ற மெய்யெழுத்தில் தம் கடைசிக் குறள் முடியுமாறு படைக்கிறார்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
(குறள் எண் 1)

என்ற முதல் குறளின் முதல் எழுத்து தமிழின் முதல் எழுத்தான அகரம்.

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
(குறள் எண் 1330)

என்ற கடைசிக் குறளின் கடைசி எழுத்து, தமிழின் கடைசி எழுத்தான `ன்’ என்ற மெய்யெழுத்து. இவ்விதமெல்லாம் எழுத்தைக் கொண்டாடி அதை அழகுபட அடுக்கிப் புனைந்து எழுத்தை அலங்கரிப்பதே எழுத்தலங்காரம் என இலக்கணத்தில் சொல்லப்படுகிறது. திருக்குறள் என்ற நூலே `அ’ வில் தொடங்கி `ன்’ இல் முடிகிறது என்றால், திருக்குறளில் அ என்ற தமிழின் முதலெழுத்தில் தொடங்கி ன் என்ற கடைசி எழுத்தில் முடியும் குறட்பாக்களும் சில உள்ளன.

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
(குறள் எண் 30)

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவ தெவன்
(குறள் எண் 46)

அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
(குறள் எண் 92)

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
(குறள் எண் 96)

அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன்இய
லான் பெண்மை நயவா தவன்.
(குறள் எண் 147)

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
(குறள் எண் 163)

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
(குறள் எண் 175)

அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
(குறள் எண் 210)

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
(குறள் எண் 483)

`அகர முதல எழுத்தெல்லாம்’ என்ற முதல் குறளிலேயே எழுத்து என்ற சொல்லைக் கையாள்கிறார் திருவள்ளுவர்.

எண்ணென்ப ஏனை எழுபத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
(குறள் எண் 392)

என எண்ணும் எழுத்தும் உயிருக்குக் கண்போன்றவை என இன்னொரு குறளிலும் எழுத்தைப் பற்றிச் சொல்கிறார்.மொழிக்கு இரண்டே வடிவங்கள்தான் உண்டு. ஒன்று ஒலி வடிவம். இன்னொன்று வரிவடிவம். வரிவடிவத்திற்கு ஆதாரமாக அமைவது எழுத்து. ஒலி வடிவம் மாறுவதில்லை. வட்டார வழக்கில் பேசும் முறையில் சற்று மாறுபாடுகள் தோன்றுகின்றனவே தவிர, பேசும் உச்சரிப்பிலோ அதன் ஒலியிலோ எந்த மாறுபாடும் இல்லை.

ஆனால் எழுத்தின் வரிவடிவம் காலந்தோறும் மாறியே வந்திருக்கிறது. கல்வெட்டில் உள்ள எழுத்துக்கும் இன்றைய நடைமுறை எழுத்துக்கும் மாறுபாடு உண்டு. `னை, ணை, லை’ என்ற எழுத்துக்களில் அடுத்தடுத்துச் சுழி அதிகமாக இருப்பதால் குழப்பம் நேர்கிறது எனக் கருதிய வீரமாமுனிவர், அந்த எழுத்துக்களில் மேலே துதிக்கை போல் வளைவு சேர்த்து எழுதும் முறையைக் கொண்டு வந்தார்.

அவ்விதம் எழுதினால் கணிப்பொறி விசைப்பலகையில் எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்பதால் நாம் இப்போது பழைய முறையையே பின்பற்றுகிறோம். எழுத்துச் சீர்திருத்த வரலாற்றில் பெரியாரின் பங்களிப்பும் உண்டு.அண்மைக் காலத்தில் வாழ்ந்தவரும் குலோத்துங்கன் என்ற பெயரில் மரபுக் கவிதைகள் எழுதியவரும் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவி வகித்தவருமான டாக்டர் வா.செ.குழந்தைசாமி, இன்றும் எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்ற கருத்தை முன்வைத்தார். முக்கியமாக எழுத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

இருபத்தாறே எழுத்துக்களில் ஆங்கிலம் இயங்க முடிகிறபோது, தமிழில் இருநூற்று நாற்பத்தேழு எழுத்துக்கள் ஏன் என்பது அவர் கேள்வி. அவர் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் சில சீர்திருத்தங்களையும் பரிந்துரைத்தார். அதை ஏற்றவர்களும் உண்டு. கடுமையாக விமர்சித்தவர்களும் உண்டு.எழுத்தெண்ணிப் பாடும் கடினமான செய்யுள் வகை ஒன்று மரபுக் கவிதையில் உண்டு. `கட்டளைக் கலித்துறை’ என அழைக்கப்படும் அந்த வகையில் பற்பல செய்யுள் நூல்கள் எழுந்தன. ஓர் அடி நேரசையில் தொடங்கப்பட்டால் அந்த அடி பதினாறு எழுத்துக்களால் அமைய வேண்டும். அதுவே நிரையசையில் தொடங்கப் பட்டால் பதினேழு எழுத்துக்களால் அமைய வேண்டும்.

எழுத்துக்களை எண்ணும்போது ஒற்றெழுத்துகளை (புள்ளி வைத்த எழுத்துக்கள்) நீக்கிவிட்டு உயிரெழுத்துக்களையும் உயிர்மெய் எழுத்துக்களையும் மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். இவ்விதம் எழுத்தெண்ணிப் பாடும் ஆற்றலுடையவர்கள் தனிச் செய்யுள்களை மட்டுமல்ல, தனி நூல்களையே எழுதியுள்ளார்கள் என்பது பழந்தமிழில் நாம் காணும் வியத்தகு சாதனை.

காரைக்கால் அம்மையாரின் `இரட்டை மணிமாலை’யில் பத்துப் பாடல்களும் சேரமான் பெருமாள் நாயனாரின் `பொன்வண்ணத்தந்தாதி’ யில் நூறு பாடல்களும் இந்தக் கடினமாக கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்துள்ளன.

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் எழுதிய “திருவேங்கடத்தந்தாதி’’ உள்பட இன்னும் பல நூல்கள் கட்டளைக் கலித்துறையில் அமைந்து தமிழை அணிசெய்கின்றன. தமிழ்ச் செய்யுளில் `அந்தாதி’ என்ற ஒரு தனி வகை உண்டு. அந்தத்தை ஆதியாக வைத்து அடுத்தடுத்துச் செய்யுள்களை அமைப்பது இந்த வகைப்படும். செய்யுளின் இறுதி எழுத்தோ அசையோ சீரோ அடியோ அடுத்த செய்யுளின் தொடக்கமாக அமையும். இத்தகைய அந்தாதிகளில் எழுத்தந்தாதி தனி அழகுடையது.

வேங்கையஞ் சாரல் ஓங்கிய மாதவி
விரிமலர்ப் பொதும்பர் நெல்லியன் முகமதி
திருந்திய சிந்தையைத் திறைகொண்டனவே!

என்ற அடிகள் பொதுவாக எழுத்தந்தாதிக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படுகின்றன. இவற்றில் ஓரடியின் கடைசி எழுத்து அடுத்த அடியின் முதல் எழுத்தாகத் திகழ்வதைக் காணலாம். `சித்திரகவி’ என்றொரு கடினமான பாவகை உண்டு. தமிழ் எழுத்துகளை பாம்பு வடிவிலும், பறவை வடிவிலும் இன்ன பிற வடிவங்களிலும் அடுக்கி அமைத்து, அவை பொருள்பொதிந்த செய்யுள்களாகவும் இருக்குமாறு இயற்றுவதே சித்திரகவி. கவிஞரின் இலக்கிய ஆற்றலை விட, மொழிப் புலமையே இத்தகைய கவிதைகளில் அதிகம் புலப்படும்.

அட்டநாக பந்தம், எழுத்து வர்த்தனம், மாலை மாற்று எனப் பலவகையான சித்திரக் கவிகள் உண்டு. பழந்தமிழ்க் கவிஞர்களில் முருக பக்தராகத் திகழ்ந்த பாம்பன் சுவாமிகள் சித்திரக் கவி அமைப்பதில் சிறந்தவராக விளங்கியவர். `சகஸ்ர பந்தம், மயூர பந்தம், கமல பந்தம், இரத பந்தம், சதுரங்க பந்தம்’ என்றெல்லாம் அதிக எண்ணிக்கையில் சித்திரக் கவிகளை எழுதியவரும் அவரே. சிவனின் கையிலிருக்கும் உடுக்கையிலிருந்து ஒலியும் அதைச் சார்ந்த எழுத்துக்களும் பிறந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. தெய்வ சான்னித்தியம் ஏற்படுவதற்காகப் பிரதிஷ்டை செய்யப்படும் இயந்திரங்களில் மந்திர எழுத்துக்கள் எழுதப்படுகின்றன. நமசிவாய, நாராயணாய, காயத்ரி மந்திரம் உள்ளிட்ட பலவும் எழுத்துக்களையும் அதன்வழி ஒலியையும் ஆதாரமாகக் கொண்டவைதான்.

ஒளவையார் எழுதிய `ஆத்திசூடி’ எழுத்தலங்காரச் செய்யுள்தான். `அறம்செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல்’ என அகர வரிசைப்படி நீதியைப் போதிக்கும் நூல் அது. ஒளவையார் பாணியிலேயே தாம் எழுதிய புதிய ஆத்திசூடியில் `அச்சம் தவிர், ஆண்மை தவறேல், இளைத்தல் இகழ்ச்சி, ஈகைத் திறன், உடலினை உறுதி செய், ஊண்மிக விரும்பு’ என மகாகவி பாரதியாரும் எழுத்தலங்காரத்தைப் பின்பற்றுகிறார்.

ஓர் ஆவணத்தின் உண்மைத் தன்மையை அதில் இடம்பெறும் கையெழுத்தை வைத்தே முடிவு செய்கிறோம். வெளிச்சத்தில்தான் எழுத்தைப் படிக்க முடியும் என்பதால் மாலைப் பொழுதை `எழுத்து மறையும் வேளை’ என்று சொல்லும் பழக்கம் சில இடங்களில் நிலவுகிறது. எழுதப் படிக்கத் தெரியாதவனை எழுத்து வாசனை இல்லாதவன் என்கிறோம். இன்ஷியல் எனப்படும் முதல் எழுத்தில் தந்தை பெயரின் முதல் எழுத்தை மட்டுமல்ல, தாய் பெயரின் முதல் எழுத்தையும் போட்டுக் கொள்ளும் வழக்கம் தற்போது வரத் தொடங்கியிருக்கிறது.

ஏற்கெனவே நிர்ணயிக்கப் பட்ட விதியைத் தலையெழுத்து என்கிறோம். பிரம்மன் அவரவர் விதியைத் தலையில் தன் கையால் எழுதுவான் என்றும் அதை மாற்ற இயலாது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் முருகன் அருள் தலைவிதியையும் அழித்துத் தலையெழுத்தை மாற்றி எழுத வல்லது என்கிறார் தாம் எழுதிய கந்தரலங்காரம் என்ற நூலில் அருணகிரிநாதர்.

சேல்பட் டழிந்தது செந்தூர் வயல்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம்
மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையும் சூரனும்
வெற்புமவன்
கால்பட் டழிந்தது என்தலைமேல் அயன் கையெழுத்தே!

தமிழ்த் திரைப்படங்களிலும் எழுத்தலங்காரப் பாடல்கள் உண்டு. `வானம்பாடி’ திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் டிஎம்எஸ், பி.சுசீலா குரல்களில் ஒலிக்கும் கண்ணதாசன் பாடல் தகர வர்க்கத்திலேயே அமைந்த எழுத்தலங்கார வரிகளைக் கொண்டு திகழ்கிறது. `ஆண்கவியை வெல்லவந்த பெண்கவியே வருக!’ எனத் தொடங்கும் அந்தப் பாடலில் வரும் வரிகள் இதோ:

தாதி தூது தீது தத்தும்
தத்தை சொல்லாது
தூதி தூது ஒத்தித்தது
தூது செல்லாது….
தேது தித்து தொத்து தீது
தெய்வம் வராது – இன்று
துத்தி தத்தும் தத்தை வாழத்
தித்தித்த தோது…`.

இந்த வரிகளுக்கான விளக்கத்தையும் அதே பாடலில் கவிதையிலேயே தருகிறார் கவியரசர்.

அடிமைத் தூது பயன்படாது
கிளிகள் பேசாது
அன்புத் தோழி தூதுசென்றால்
விரைவில் செல்லாது
தெய்வத்தையே தொழுது நின்றால்
பயனிருக்காது – இளம்
தேமல்கொண்ட கன்னி வாழ
இனியது கூறு

`சரஸ்வதி சபதம்’ திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் டிஎம்எஸ் குரலில் ஒலிக்கும் கண்ணதாசன் பாடல் எழுத்தலங்காரத்தின் விளக்கப் பாடல் போல் முழுமையாக அமைந்து கவனத்தை ஈர்க்கிறது.

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி
ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய் தேவி
இயலிசை நாடக தீபம் ஏற்றிவைத்தாய் நீயே
ஈன்றவர் நெஞ்சையின்று குளிரவைத்தாய் தாயே…
உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரியவைத்தாய்
ஊமையின் வாய்திறந்து பேசவைத்தாய்
எண்ணும் எழுத்தென்னும் கண்திறந்தாய்
ஏற்றம்தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளியவைத்து அறிவுதந்தாய்
ஒலிதந்து மொழிதந்து குரல்தந்தாய்
ஓங்கார இசைதந்து உயரவைத்தாய் தேவி…’

`உயிர்’ எழுத்துகளின் வரிசையை ஒவ்வோர் அடியிலும் தொடக்கத்தில் அமைத்து நம்மை `மெய்’ம்மறக்கச் செய்கிறார் கண்ணதாசன்! `குலவிளக்கு’ திரைப்படத்தில் பி.சுசீலா குரலில் ஒலிக்கும் கண்ணதாசன் பாடல் `பு’ என்ற எழுத்தை வைத்து எண்ணலங்காரமாக சொல்விளையாட்டு விளையாடுகிறது.

பூப்பூவாப் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம்பூ
பூவிலே சிறந்த பூ என்ன பூ?… அன்பு

எனத் தொடங்கி, சிரிப்பு, குறும்பு, கரும்பு, சலிப்பு, மதிப்பு எனப் பல்வேறு சொற்கள் அதில் நயமாகப் பின்னப்பட்டுள்ளன. எழுதுபவர்களை எழுத்தாளர் என்கிறோம். திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர். நீதிநெறியைச் சொல்வதற்காக மொழியைப் பயன் படுத்திய அவர், அந்த மொழியில் உள்ள எழுத்தை அழகியலோடு கையாள்கிறார் என்பதுதான் வள்ளுவரின் கூடுதல் சிறப்பு. அந்த அழகியலே திருக்குறள் என்ற நீதிநூலை காலத்தால் அழியாத இலக்கியமாக்குகிறது.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

The post திருக்குறளில் எழுத்தலங்காரம்… appeared first on Dinakaran.

Tags : Kunkumum ,Thiruvalluvar ,
× RELATED கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா