×

கர்நாடகாவில் கிரக லட்சுமி திட்ட தொடக்க விழா.. இன்று முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 டெபாசிட்!!

பெங்களூரு : கர்நாடக மாநில அரசின் சார்பில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்ட துவக்க விழா மைசூரு மாநகரில் இன்று நடக்கிறது. திட்டத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி தொடங்கி வைக்கிறார். மாநிலம் முழுவதும் ஒரே சமயத்தில் 10 ஆயிரம் இடத்தில் துவக்க விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு கடந்த மே மாதம் நடந்த பொது தேர்தலின்போது, காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், பெண்கள் சக்தி திட்டத்தில் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டம், அன்னபாக்யா திட்டத்தில் பிபிஎல் ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் மற்றும் படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு யுவசக்தி திட்டத்தில் மாதம் ₹3,000 உதவி தொகை வழங்கப்படும் என்று உத்தரவாத வாக்குறுதி அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதியை ஏற்று மக்கள் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கொடுத்தனர். அதை தொடர்ந்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை ஒன்றின் பின் ஒன்றாக செயல்படுத்த தொடங்கியது. அதன்படி கடந்த ஜூன் 11ம் தேதி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் பெண்கள் சக்தி திட்டம் தொடங்கப்பட்டது. ஜூலை 1ம் தேதி முதல் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஜூலை 9ம் தேதி முதல் அன்னபாக்யா திட்ட பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் பெடாசிட் செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆட்சி பொறுப்புக்கு வந்த மூன்று மாதங்களில் மூன்று முத்தான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது.

கிரகலட்சுமி திட்ட துவக்க விழா:

ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் மூன்று முத்தான திட்டங்கள் அமல்படுத்தி உள்ள நிலையில், அந்த வரிசையில் நான்காவது திட்டமாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹2 ஆயிரம் வங்கியில் டெபாசிட் செய்யும் கிரகலட்சுமி திட்டம் செயல்படுத்த முடிவு செய்து, பயனாளிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதுவரை 1.23 கோடி பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செலுத்தி உள்ளனர். கர்நாடக ஒன், பெங்களூரு ஒன். கிராம ஒன், நகரசபை, கிராம பஞ்சாயத்து அலுவலகம் மூலம் விண்ணப்பம் செலுத்துவதுடன் அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கு சென்று விண்ணப்பம் செலுத்தப்படுகிறது.

இத்திட்டம் பெண்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்காக செயல்படுத்துவதால் இத்திட்டத்திற்கு ‘‘நீ…தலைவி’’ (நீ நாயகி) என்ற பெயரில் மைசூரு மாநகரில் இன்று நடக்கும் விழாவில் தொடங்கி வைக்கப்படுகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமார், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பாள்கர் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி திட்டத்தை துவக்கி வைக்கிறார். விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்ட பேரவை, மேலவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

இன்று மாலையே டெபாசிட்
அதே சமயத்தில் கிராம பஞ்சாயத்துகள், நகரசபைகள், டவுன் முனிசிபாலிடிகள், பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இன்று ஒரே சமயத்தில் மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை, மேலவை உறுப்பினர்கள், நகர மற்றும் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் திட்டங்கள் பயனாளிகள் முன்னிலையில் தொடங்கி வைக்கிறார்கள். பெங்களூருவில் உள்ள 198 வார்டுகளிலும் துவக்க விழா நடக்கிறது. இன்று மாலைக்குள் பயனாளிகளின் வங்கி கணக்கில் ₹2 ஆயிரம் டெபாசிட் செய்யப்படுகிறது. அதற்கான குறுந்தகவல் செல்போனுக்கு வரும். விண்ணப்பம் செலுத்த காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post கர்நாடகாவில் கிரக லட்சுமி திட்ட தொடக்க விழா.. இன்று முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 டெபாசிட்!! appeared first on Dinakaran.

Tags : Planetary Lakshmi Project Launch Festival ,Karnataka ,Bengaluru ,Krakalakshmi Project ,Karnataka state government ,Dinakaran ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி