×

அரவக்குறிச்சி பகுதியில் சூரியகாந்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற வேண்டுமா? முன்னோடி விவசாயி ஆலோசனை வழங்கல்

அரவக்குறிச்சி, ஆக.30: அரவக்குறிச்சி பகுதியில் சூரியகாந்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற்று லாபம் அடைய கரூர் மாவட்ட விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் மாவட்ட தலைவரும், முன்னோடி விவசாயியான ஈசனத்தம் செல்வராஜ் தொழில் நுட்ப ஆலோசனைகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வழங்கிய ஆலோசனை வருமாறு: கரூர் மாவட்டத்திலேயே அரவக்குறிச்சி பகுதியில் சூரியகாந்தி பயிர் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. இதில், அரவக்குறிச்சி வட்டத்தில் விவசாயிகள் ஆர்வமுடன் சூரியகாந்தி பயிரிட்டுள்ளனர். சூரியகாந்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற்று லாபம் அடைய 90 நாட்கள் குறுகிய கால பணப் பயிரான சூரியகாந்திக்கு இப்பருவத்தில் நல்ல விளைச்சலை ஏற்படுத்த தற்பெழுது சூரியகாந்தி பூவை அயல் மகரந்த சேர்க்கைக்கு உட்படுத்த வேண்டிய தக்க தருணமாகும்.

இதற்கு காலை 7 மணி முதல் 11 மணிக்குள் ஒரு பூவுடன் மற்றோரு பூவை லேசாக தேய்த்து ஒற்றி எடுக்க வேண்டும் அல்லது ஒரு மெல்லிய துணியால் பூவை லேசாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் அயல் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு 80வது நாளில் அறுவடை செய்யும் போது பூ முழுமை அடைந்து விதைகள் திரட்சியாகவும், இடைவெளியின்றி நெருக்கமாகவும் கிடைக்கும்.மேலும், பூக்கள் அதிகளவில் இருக்கும். போது அயல்மகரந்த சேர்க்கை நடைபெற சூரிய காந்தி வயல் அருகே தேனி வளர்ப்பு பெட்டிகளை வைத்து, தேனீக்களை தேன் சேகரிக்க வைத்தால், இதன் மூலமும் அயல் மகர்ந்த சேர்க்கை 100 சதவீதம் நடைபெறும். மேலும், விவசாயிகளுக்கு தேன் மூலம் கூடுதலான வருமானமும் கிடைக்கும். இவ்வாறு முன்னோடி விவசாயி ஈசனத்தம் செல்வராஜ் சூரியகாந்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற்று லாபம் அடைய தொழில்நுட்ப ஆலோசனைகளை தெரிவித்துள்ளார்.

The post அரவக்குறிச்சி பகுதியில் சூரியகாந்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற வேண்டுமா? முன்னோடி விவசாயி ஆலோசனை வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Aravakurichi ,Pioneer Farmer Advisory ,Aravakurichi region ,Karur ,Pioneering ,Dinakaran ,
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...