
சென்னை: ‘‘அமலாக்க துறை தொடர்ந்த வழக்கில் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அமலாக்க துறையின் காவல் விசாரணை முடிந்து நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. அப்போது, நீதிபதி செந்தில் பாலாஜி, ஜாமீன் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இந்த நீதிமன்றத்திற்கு இல்லை. முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகுமாறும் உத்தரவிட்டார்.
இதையடுத்து முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரினார். இதை கேட்ட நீதிபதி கவனிக்கிறேன். மனு பட்டியலிடப்பட்டவுடன் விசாரிக்கிறேன் என்றார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் appeared first on Dinakaran.