×

காவிரி மேலாண்மை ஆணையம் நாங்கள் சொன்னதை ஏற்கவில்லை; மறுபடியும் உச்ச நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையம் நாங்கள் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆகையால் வேறுவழி கிடையாது, மறுபடியும் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டியது தான் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று டெல்லியில் கூடிய நிலையில் சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நேற்று முன்தினம் காவிரியில் 5 ஆயிரம் கன அடி தண்ணீரை 15 நாட்களுக்கு திறந்து விடும்படி அந்த கமிட்டி சிபாரிசு செய்திருக்கிறது. ஆனால் அது போதாது என்று நாம் சொல்லி உள்ளோம். எனவே இன்றைக்கு (நேற்று) காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடக்கிறது. அதில் தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். அவர்கள் தமிழகத்தின் கோரிக்கையை வற்புறுத்தினர். 24000 கன அடி தண்ணீர் இருந்தால்தான் பயிர்கள் காயாமல் இருக்கும் என்பதை அழுத்தம் திருத்தமாக கூறினர்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா அணைகளில் தண்ணீர் வாய்ப்பு இல்லை என்று கூறி உள்ளார். காவிரி மேலாண்மை ஆணையம் நாங்கள் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. காவிரி ஒழுங்காற்றுக் குழு கூறியதை தான் காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகையால் வேறுவழி கிடையாது. மறுபடியும் நீதிமன்றத்தை அணுக வேண்டியது தான், வரும் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் வழக்கு வருகிறது அன்றைக்கு தெரிவிப்போம். அவர்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள். எங்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். குறைந்தது 24000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று கேட்கிறோம். அவர்கள் 5000 டிஎம்சி தண்ணீர் 15 நாட்களுக்கு வரும் என்று கூறுகிறார்கள். அதனால்தான் நாங்கள் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறோம். வெள்ளிக்கிழமை வழக்கு வருகிறது. குறுவை சாகுபடி மோசமான நிலையில் உள்ளது. கர்நாடகா 45 டி.எம்.சி. தண்ணீர் தராமல் நிலுவையில் வைத்துள்ளனர் என்று அவர் கூறினார்.

The post காவிரி மேலாண்மை ஆணையம் நாங்கள் சொன்னதை ஏற்கவில்லை; மறுபடியும் உச்ச நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : caviri management ministry ,minister ,thurimurugan ,Chennai ,Caviri Management Commission ,Supreme Court ,Thuryumrugan ,
× RELATED நடப்பு பருவத்திற்கு தேவையான உரம்...