×

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் சைலன்டாக சாதனை படைக்கும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை: இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பாதிப்பு

சிறப்பு செய்தி: மனித உடலில் கல்லீரலின் பங்கு என்பது இன்றியமையாதது. அது, மனித உடலின் 500 முக்கிய இயக்கங்களில் அதன் பங்களிப்பு முக்கியம். அந்தவகையில், நமது உணவில், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவற்றின் செரிமானம் நடைபெறுகிற ஒரே இடம் கல்லீரல் மட்டுமே. அதுமட்டுமின்றி கல்லீரலுக்கு உள்ள சிறப்பு அம்சமே, அதற்கு பாதிப்பு உண்டாகும் போது அது தன்னைத்தானே சரி செய்து கொள்ளும். மேலும், நகம் வெட்டினால் மீண்டும் வளர்வது போன்று கல்லீரலும் வளரும். மனிதனின் வாழ்கை முறை, உணவு முறையில் ஏற்படும் மாற்றம் காரணமாக கல்லீரல் பாதிப்பு தொடங்குகிறது.

உலகளவில் கல்லீரல் நோயால் ஆண்டுதோறும் இரண்டு மில்லியன் பேர் இறக்கின்றனர். அதாவது 25 இறப்புகளில் ஒருவர் கல்லீரல் பாதிப்பால் இறக்கின்றனர். இதில் மூன்றில் 2 பங்கு பாதிக்கப்படுவது ஆண்கள் மட்டுமே என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்படுகின்றனர். உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில், கல்லீரல் பாதிப்பு காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை 10வது இடத்தில் உள்ளது. மேலும், 5 இந்தியர்களில் ஒருவருக்கு கல்லீரல் நோய் வரலாம் என்கிறது உலக சுகாதார அமைப்பு. கல்லீரல் பாதிப்பில் முக்கிய பங்கு வகிப்பது மது குடிப்பது. மதுப்பழக்கம் உள்ளவர்கள்தான், கல்லீரல் அழற்சி நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், கடந்த 2006ம் ஆண்டு முதல் கல்லீரல் அழற்சிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஏறக்குறைய தினமும் 200 புறநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். உள் நோயாளிகளுக்காக 90 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்முறையாக கடந்த பிப்ரவரி மாதம் கூலி தொழிலாளர் ஒருவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைக்கப்பட்டது. ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு பொது மருத்துவமனை, கோவை அரசு பொது மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை ஆகிய 5 மருத்துவமனைகள் மற்றும் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையும் இணைந்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதனடிப்படையில், ரூ. 7 கோடியில் நவீன அரங்கம் அமைக்கப்பட்டு முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இதுவரை 4 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக கல்லீரல் அரசு மருத்துவமனை கல்லீரல் துறை இயக்குனர் பிரேம்குமார் கூறியதாவது:

ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் நோய் அறுவை சிகிச்சைக்காக 6 படுக்கைகள் உள்ளது. இதுவரை, 4 பேருக்கு கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இணை நோய் உள்ளவர்களுக்கும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய 2 முதல் 3 வாரம் தேவை. காரணம், அவர்களுக்கு 32 வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டு 15 துறையின் மருத்துவர்கள் ஒப்புதல் அளித்த பிறகுதான் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். கல்லீரல் அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது. ஹெபடைடீஸ் ‘சி’ யால் பாதிக்கப்படும் நபர்களை எளிதில் குணப்படுத்திவிடலாம். ஆனால், கல்லீரல் ஹெபடைடீஸ் ‘பி’யால் பாதிக்கப்பட்டால், பாதிப்பை கட்டுப்படுத்தலாம் அல்லது குணப்படுத்தலாம். எனவே, பொதுமக்கள் கல்லீரலை பாதுகாப்பது அவசியமான ஒன்றாகும்.

The post கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் சைலன்டாக சாதனை படைக்கும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை: இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi Govt Hospital ,India ,Rajiv Gandhi Government Hospital ,
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...