×

மாதவரம் மாத்தூரில் சோகம் கொசு மருந்து குடித்த பெண் குழந்தை பலி

திருவொற்றியூர்: மாதவரம் பால் பண்ணை, மாத்தூர் எம்எம்டிஏ, பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. கார் டிரைவர். இவரது மனைவி நந்தினி. இவர்களது இரண்டாவது மகள் லட்சுமி (2). நேற்று முன்தினம் மாலை நந்தினி, வழக்கம்போல் சமையலறையில் இரவு உணவிற்கான பணிகளை மேற்கொண்டு இருந்தார். அப்போது குழந்தை லட்சுமி வீட்டின் நடுப்புறத்தில் உள்ள ஹாலில் விளையாடிக் கொண்டிருந்தது. அந்த சமயம் அங்கு டேபிள் நாற்காலியில் வைக்கப்பட்டிருந்த கொசு விரட்ட பயன்படுத்தப்படும் திரவத்தை குழந்தை லட்சுமி எடுத்து குடித்ததாக தெரிகிறது. இதனால் குழந்தை அங்கேயே மயங்கி விழுந்தது.

சத்தம் இல்லாமல் இருப்பதைக் கண்டு குழந்தை என்ன செய்கிறது என பார்க்க சமையலறையில் இருந்து வீட்டின் ஹாலுக்கு நந்தினி வந்துள்ளார். அப்போது, வாயில் நுரை தள்ளியபடி குழந்தை இருந்ததை கண்டு அலறி அடித்து அழுதபடி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து மாதவரம் பால் பண்ணை காவல் உதவி ஆய்வாளர் சாந்தி வழக்கு பதிவு செய்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post மாதவரம் மாத்தூரில் சோகம் கொசு மருந்து குடித்த பெண் குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Mathavaram ,Mathur ,Balaji ,Mathavaram Milk Farm ,MMDA ,Perumal Temple Street ,
× RELATED மத்தூர் அருகே விவசாய...