×

1000 மருத்துவர் காலியிடம் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முடிவுற்ற பணிகளை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுபிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்டான்லியில் உணர்திறன் ஒருங்கிணைப்பு சிகிச்சை பூங்கா 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வேறு எங்கும் இதுபோல் வசதி உள்ள பூங்கா இல்லை. இங்கு 50 முதல் 60 சதவீதம் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ மாணவர்கள் பயன்பெறும் விதமாக 10 லட்ச ரூபாய் மதிப்பில் சிறு பிராணிகள் ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டு உள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் 5 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு 112 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் ஆறு தளங்கள் கொண்ட கிரிட்டிக்கல் கேர் பிரிவு கட்டிடம், 300 படுகை வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். இங்கு உள்ள செவிலியர் பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தங்கும் விடுதி 70 கோடியில் 400 பேர் தங்கும் அளவிற்கு கட்டப்பட உள்ளது. அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட்டு ஒப்பந்தம் கோரப்படும். 1000 மருத்துவர்களுக்கான காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது. விரைவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு முதல்வர் பணி நியமன ஆணையை வழங்குவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மேயர் பிரியா, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் இளைய அருணா, மருத்துவ கல்வி இயக்குனர் சாந்திமலர், கல்லூரி முதல்வர் பாலாஜி, ராயபுரம் பகுதி செயலாளர்கள் வ.பெ.சுரேஷ், செந்தில்குமார், துறை பேராசிரியர்கள், மருத்துவர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

* மயங்கி விழுந்த பெண்ணுக்கு உதவி
ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று பல்வேறு மருத்துவ வசதிகளை திறந்து வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் சைதாப்பேட்டை வழியாக சென்று கொண்டிருந்தார். ஜோன்ஸ் சாலையில் ராணி என்ற பெண் சுயநினைவின்றி சாலையில் மயங்கி விழுந்தார். இதை கண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் காரை நிறுத்தி அந்த பெண்ணை மீட்டு கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்கு காரில் அனுப்பி வைத்தனார். அங்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு, உரிய சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. காயத்துக்கு 2 தையல்களும் போடப்பட்டது.

The post 1000 மருத்துவர் காலியிடம் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister M. Subramanian ,Thandaiyarpet ,Vannarpettai Government Stanley Medical College and Hospital, Medical and Public Welfare ,Minister ,M. Subramanian ,Dinakaran ,
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்: முதியவர் கைது