×

ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியின்போது உயிரிழந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு: மாநகர போக்குவரத்து கழகம் ஒப்புதல்

சென்னை: பணியின் போது உயிரிழக்கும் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாநகர போக்குவரத்து கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியின்போது ஏற்படும் சாலை விபத்துகளினாலும், பணிமனைக்குள் நிகழும் விபத்துகளினாலும், இயற்கை மரணம் மற்றும் நோய்வாய் பட்டு மரணம் ஏற்படும் நிலையிலும் போக்குவரத்து கழகத்தில் உள்ள கிளைகள், பிரிவு அலுவலகங்களில் பணியாற்றிய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, சக தொழிலாளர்களிடம் இருந்து நேரடியாக நிதி கோரி பெற்று வழங்கும் முறை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

இந்த நடைமுறை ஒரே சீராக இல்லாத காரணத்தால் போக்குவரத்து தலைமை அலுவலக நிர்வாகமே இதற்கென ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதனடிப்படையில், இதற்கென ஒரு திட்டத்தை உருவாக்கும் நோக்கத்தோடு, சென்னை, பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் தொழிலாளர் இறப்பு நிதி தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று முன்தினம் மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எல்பிஎப், எம்எல்எப், சிஐடியு, ஏஐடியுசி உட்பட 30 சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளின் ஒருமித்த கருத்தின்படி, மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் இறப்பு உதவி நிதி என்ற பணியாளர்களுக்கான புதிய திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி மாநகர போக்குவரத்து கழகத்தில் உள்ள கிளைகள், தொழிற்கூடங்கள் மற்றும் தலைமை அலுவலகம் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், மேற்பார்வையாளர்கள், வேலை பழகுநர்கள் மற்றும் அலுவலர்கள் பணியின்போது சாலை விபத்துகளினாலும், பணிமனையில் ஏற்படும் விபத்துகளினாலும், இயற்கை மரணம் மற்றும் நோய்வாய்பட்டு இறந்தாலும் அவர்களது சட்டப்படியான வாரிசுக்கு, நிர்ணயிக்கப்பட்ட தொகை வழங்கப்படும்.

அந்த வகையில் பணியாளர் பணியின்போது உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.10 லட்சமும், பணியாளர் இயற்கை எய்தினால், நோய்வாய் பட்டு இறந்தால் ரூ.5 லட்சமும், வேலை பழுதுநர்களுக்கு பணியின்போது இறப்பு ஏற்பட்டால் ரூ.2 லட்சமும் வழங்கப்படும். இத்திட்டம் வரும் செப்.1ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்துக்காக தற்போது பணியில் உள்ள ஊழியர்களின் மாத சம்பளத்தில் ரூ.260க்கு மிகாமல் பிடித்தம் செய்யப்படும். தொழிலாளர்கள் இறப்பு எண்ணிக்கை குறையும்போது பிடிக்கப்படும் தொகையும் குறைக்கப்படும்.

The post ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியின்போது உயிரிழந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு: மாநகர போக்குவரத்து கழகம் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Municipal Transport Corporation ,Chennai ,Metropolitan Transport Corporation ,Municipal ,Dinakaran ,
× RELATED தனியார் மூலம் ஓட்டுநரை நியமிக்கும் டெண்டர் ரத்து: ஐகோர்ட்