×

நவீன ஊழலின் அடையாளமாக திகழும் பரனூர் டோல்கேட் இனி ‘பாஜ மாடல் டோல்கேட்’: உலக மகா மோசடி அம்பலம் என மதுரை எம்.பி குற்றச்சாட்டு

மதுரை: சிஏஜி அறிக்கை உலக மகா டோல்கேட் ஊழலை அம்பலப்படுத்தியுள்ளது. பரனூர் டோல்கேட்டை இனி, பாஜ மாடல் டோல்கேட் என்றே அழைக்கலாம் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை எம்பி சு.வெங்கடேசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜ அரசின் 7 ஊழல்களைப் பற்றி பேசியுள்ள சிஏஜி அறிக்கை ஒரு பெரும் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது. இதில் முக்கியமானது டோல்கேட் ஊழல். பொதுப் பணத்தில் அமைக்கப்பட்ட சாலைகளில் உள்ள டோல்கேட்கள், தனியார் பணத்தில் அமைத்த சாலைகளில் உள்ள டோல்கேட்கள் என இருவகையுண்டு. பொதுப்பணத்தில் அமைத்த செங்கல்பட்டு – பரனூர் டோல்கேட் வழியாக ஆகஸ்ட் 2019ல் இருந்து ஜூன் 2020 வரை ஒரு கோடியே 17 லட்சத்து 8 ஆயிரத்து 438 வாகனங்கள் கடந்துள்ளன.

இவற்றில் 62 லட்சத்து 37 ஆயிரத்து 152 வாகனங்கள் டோல் கட்டணம் செலுத்தாமல் போன விஐபி வாகனங்கள் என சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது. பரனூர் டோல்கேட் மட்டுமல்ல. பொதுப் பணத்தில் அமைந்த மற்ற டோல்கேட்களிலும் இதுதான் நிலைமை. பொதுப்பணத்தில் அமைந்த பரனூர் டோல்கேட்டில் 53 சதவீதம் விஐபிகள் பயணிக்கின்றனர். எவ்வளவு பெரிய திருட்டுத்தனம் அரங்கேறி இருக்கிறது? சிஏஜி அறிக்கை இன்னொரு குண்டை போடுகிறது. விஐபிகள் டோல்கேட்டில் சென்றார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் சேகரிக்கப்படவில்லை. பதிவுகள் கூட செய்யப்படவில்லை. எத்தனை மடங்கு தொகையை இவர்கள் வாரிச்சுருட்டி உள்ளனர்?. இன்னொரு சுவாரசியமும் உண்டு.

1956 செப்டம்பர் 11க்கு பின்னால் கட்டப்பட்ட பாலங்களில் செல்வதற்குத்தான் டோல் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் 1954ல் கட்டப்பட்ட பரனூர் டோல்கேட் பாலம் ஒன்றின் வழி பயணத்திற்கு 2018 – 2021ல் ரூ.22.10 கோடி வசூல் ஆகியுள்ளது. பரனூர் டோல்கேட் சிஏஜி அறிக்கையால் பலவகையிலும் வரலாற்று சிறப்பு மிக்க டோல்கேட்டாக மாறியுள்ளது. உலகத்திலேயே 50 சதவிகித விஐபிகள் பயணம் செய்யும் பெருமை கொண்ட பரனூர் டோல்கேட்டை நவீன ஊழலின் அடையாளமாக ‘பாஜக மாடல் டோல்கேட்’ என்றே அழைக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post நவீன ஊழலின் அடையாளமாக திகழும் பரனூர் டோல்கேட் இனி ‘பாஜ மாடல் டோல்கேட்’: உலக மகா மோசடி அம்பலம் என மதுரை எம்.பி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Madurai ,CAG ,Paranur tollgate ,Dinakaran ,
× RELATED மோசடியாக நீட் தேர்வு எழுதிய நபர்களின்...