×

ரூ.35.79 கோடி சொத்து குவிப்பு வழக்கு: அதிமுக மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியுடன் நீதிமன்றத்தில் ஆஜர்

புதுக்கோட்டை: ரூ.35.79 கோடி சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மனைவி ரம்யாவுடன் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சவுராஷ்டிரா தெருவில் வசிப்பவர் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். அதிமுக ஆட்சியில் 2016 முதல் 2021 வரை வருமானத்தை மீறி ரூ.27 கோடி மதிப்பில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து 2021 அக்டோபர் 18ம்தேதி அவரது வீடு உள்ளிட்ட 56 இடங்களில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் ரூ.23.85 லட்சம் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகனங்களின் சான்றுகள், 19 ஹார்ட் டிஸ்க்குகள் என பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. விஜயபாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவரது பெயரிலும், அவரது மனைவி ரம்யா பெயரிலும் வாங்கி குவித்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக இருவர் மீதும் கடந்த மே 22ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயந்தி முன் 216 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதோடு 10 ஆயிரம் பக்க சொத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து கடந்த 5ம் தேதி விஜயபாஸ்கர் நேரில் ஆஜரானார். அப்போது, ஆகஸ்ட் 29ம் தேதி அவரையும், மனைவி ரம்யாவையும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று காலை விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராயினர். வழக்கை விசாரித்த நீதிபதி பூரணஜெயஆனந்த், செப்டம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post ரூ.35.79 கோடி சொத்து குவிப்பு வழக்கு: அதிமுக மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியுடன் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,-minister ,Vijayabaskar ,Pudukottai ,Former ,minister ,C.Vijayabaskar ,Ramya ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி