
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் விரைவில் ஹெலிபேட் அமைய உள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். ராமேஸ்வரத்திற்கு நேற்று வந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ராமேஸ்வரம், மண்டபத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் தங்கும் விடுதிகளை ஆய்வு செய்தார். ராமேஸ்வரம் – தனுஷ்கோடி சாலையில் நடராஜபுரம் பகுதியில் ஹெலிபேட் தளம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட 13 ஏக்கர் நிலப்பகுதியை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வரை சென்று பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘தனுஷ்கோடியில் புயலால் அழிந்த சர்ச் உள்ளிட்ட கட்டிடப் பகுதிகள் பழமை மாறாமல் பாதுகாக்கப்படும். ஆண்டுதோறும் ராமேஸ்வரம் வரும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து செல்வதால், தனுஷ்கோடியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகை போதாது. தனுஷ்கோடியில் சுற்றுலா சார்ந்த திட்டங்களை செயல்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படும். நடராஜபுரம் பகுதியில் ஹெலிபேட் அமைக்க அனைத்து அனுமதியும் வழங்கப்பட்டு விட்டது. விரைவில் இதன் பணிகள் துவங்கப்படும். தமிழ்நாடு தங்கும் விடுதியில் பழைய கட்டிடங்களை அகற்றி புதிதாக அறைகள் கட்டும் பணி ரூ.7 கோடி செலவில் விரைவில் துவங்கப்படும்’’ என்றார்.
The post ராமேஸ்வரத்தில் விரைவில் ஹெலிபேட் appeared first on Dinakaran.