×

விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து சென்னையில் வரும் 6ம் தேதி ஆர்ப்பாட்டம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து வரும் 6ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தி.க. சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று நடந்தது. கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை பொது செயலாளர் மு.வீரபாண்டியன், மதிமுக அமைப்பு செயலாளர் ஆ.வந்தியத்தேவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மமக பொது செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர் கட்சி தலைவர் பொன்குமார், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு கோ.கருணாநிதி, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொது செயலானர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தி.க.துணை தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பாஜ தலைமையிலான ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அண்மையில் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. பிரதமர் மோடி சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சியிலும் இத்திட்டத்தை அறிவித்துள்ளார்.

செருப்பு தைப்பவர் உள்பட பரம்பரை பரம்பரையாக 18 வகையான ஜாதி தொழில்களைச் செய்பவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகக் கூறி ரூ.13 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. குரு-சிஷ்யப் பரம்பரை என்றும் வெளிப்படையாகவே கூறப்பட்டுள்ளது. இந்த நிதியைப் பெறுவதற்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பது 18 வயது அடைந்த பிள்ளைகளை மேற்கொண்டு கல்லூரியில் படிக்கவிடாமல் பரம்பரை ஜாதி தொழிலையே செய்யத் தூண்டும், குலத்தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சியாகும். இந்த திட்டத்தை எதிர்க்க முன்வர வேண்டும். முதற்கட்டமாக இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் குலக்கல்வி திட்டத்தின் மறுவடிவமான விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து அனைத்து சமூகநீதிக் கொள்கை சார்ந்த கட்சிகளும் ஒருங்கிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை வரும் 6ம் தேதி சென்னையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

The post விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து சென்னையில் வரும் 6ம் தேதி ஆர்ப்பாட்டம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Vishwakarma ,Yojana ,Chennai ,Vishwakarma Yojana ,. D.K. ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில்...