சென்னை: காஸ் சிலிண்டர் மட்டுமல்லாமல், பெட்ரோல், டீசல் விலையையும் மோடி அரசு குறைத்தே தீர வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மோடி 2014ல் பதவி ஏற்ற போது ஒரு சிலிண்டரின் விலை ரூ.410 ஆகும். ஆனால் இப்போது ரூ.1240க்கு விற்கப்படுகிறது. அதாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் காலத்தில், 3 சிலிண்டர் வாங்கியதற்கான பணத்தில், இப்பொழுது ஒரு சிலிண்டர் மட்டுமே வாங்க முடியும்.
ஒரு சிலிண்டருக்கு ரூ.200 குறைத்தது ஓணத்துக்கான பரிசு என்றால், ரூ.830ஐ படிப்படியாக ஏற்றியது எதற்காக கொடுக்கப்பட்ட தண்டனை என்பதை அரசு சொல்ல வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கிய பின்பு, 2024 தேர்தலை நினைத்து பாஜ பதற்றத்தில் இருக்கிறது. இதனால் இத்தகைய பரிசுகளை அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அது தள்ளப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு மட்டுமல்லாது, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையையும், மோடி அரசு கச்சா எண்ணெய் விலை சரிந்த அளவுக்கு குறைத்தே தீர வேண்டும்.
The post காஸ் சிலிண்டர் மட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல் விலையை மோடி அரசு குறைக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
