×

காஞ்சிபுரத்தில் அனைத்து துறை கண்காட்சி: கலெக்டர், எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

காஞ்சிபுரம்: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, காஞ்சிபுரம் பிடிஓ அலுவலகத்தில் நடந்த அரசு துறைகள் சார்ந்த கண்காட்சி முகாம் நடந்தது. அதில், கலெக்டர், எம்பி, எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து துறைகளிலும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் பிடிஓ அலுவலகத்தில் நேற்று அரசு துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து விழிப்புணர்வு முகாம் மற்றும் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில், கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்பி செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

கண்காட்சியில், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம் மற்றும் வேளாண்மை துறைகளின் மூலம் அரங்குகள் அமைக்கப்பட்டு, துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு, அரசு துறையின் பணிகள் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர். இதில், தோட்டக்கலை துறை சார்பில், ட்ரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு, செயல்படுத்தி காட்டப்பட்டது. மகளிர் திட்டம் சார்பில் சிறுதானியம் மற்றும் உணவு முறைகள் காட்சியமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிறுதானியத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. வனத்துறை சார்பில், மரங்கள் மற்றும் மரங்களினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

அப்போது, கலெக்டர் கலைச்செல்வி மோகன், இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தேவைப்படும் நலத்திட்டங்களை சம்பந்தப்பட்ட துறையின் முகாமில் அலுவலர்களை சந்தித்து தங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். இம்முகாமில், காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு துணை தலைவர் திவ்வியப்பிரியா இளமது, வட்டார வளர்ச்சி அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் அனைத்து துறை கண்காட்சி: கலெக்டர், எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : All Department Exhibition ,Kancheepuram ,MLA ,Kanchipuram ,Kanchipuram PTO ,Dinakaran ,
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில் காஞ்சிபுரம் ஆட்சியர் நேரில் ஆய்வு..!!