×

காஞ்சிபுரத்தில் திருவிக பிறந்தநாள் விழா: விஐடி பல்கலைக்கழக வேந்தர் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த, திருவிக 141வது பிறந்தநாள் விழாவில், தமிழ்மொழி 160 நாடுகளில் பேசப்படுகிறது என்று வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் பேசினார். காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் இயக்கம் மற்றும் காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்துறை இணைந்து, திருவிக 141வது பிறந்தநாள் விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் இயக்க செயலாளர் செந்தில்நாதன் வரவேற்று பேசினார். இதில், வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தரும், தமிழ் இயக்க நிறுவன தலைவருமான ஜி.விஸ்வநாதன் கலந்துகொண்டு, பேச்சு போட்டியில் வெற்றிபெற்ற 50 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழை வழங்கினார்.

பின்னர், அவர் பேசியதாவது: உலகத்தில் உள்ள 7,200 மொழிகளில் இந்தியர்கள் 22 மொழிகள் பேசக்கூடியவர்கள். இதில், 121 மொழிகள் பேசப்படும் மொழிகளாக உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்பு, மூத்த மொழியாக தமிழ்மொழி இருந்துள்ளது. அந்த காலத்தில் கிரேக்கம், இலத்தீன் போன்ற மொழிகளும், இந்தியாவில் தமிழ், சமஸ்கிருதம் மட்டுமே இருந்துள்ளது. தமிழ்மொழி 160 நாடுகளில் பேசப்படுகிறது. 110 நாடுகளில் குடியுரிமை பெற்று நாம் வாழ்ந்து வருகிறோம். உலகத்திலே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது திருக்குறள் மட்டுமே. ஆகவே தமிழ்பேசும் நாம் அனைவரும் பெருமை கொள்ள முடியும்.

பாதி தமிழ் மொழிக்காகவும், மீதி தமிழர்களுக்காகவும் நாம் வாழ வேண்டும். தமிழ் மொழியை நாம் காக்க வேண்டும். கல்வி ஒன்று தான் உங்களை உயர்த்தும், தமிழ் தென்றல் திருவிக பல்வேறு பணிகளை செய்து வந்தாலும், 70 ஆண்டுகள் அவர் வாழ்ந்தாலும் வாடகை வீட்டிலே வாழ்ந்து மறைந்தவர். திருவிக அவர்களின் பல்வேறு பணிகளை நாம் நினைவு கூர்ந்து வாழ வேண்டும். கல்வி முக்கியத்துவம் வாய்ந்தது, கல்வியில் முக்கியத்துவம் அளித்தால்தான் முன்னேற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் இயக்க பொது செயலாளர் பேராசிரியர் அப்துல்காதர், மாநில செயலாளர் சுகுமார், பொருளாளர் பதுமனார், ஒருங்கிணைப்பாளர் வணங்காமுடி, மதிமுக துணை பொது செயலாளர் மல்லைசத்யா, காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், கிருஷ்ணா கல்லூரி முதல்வர் வெங்கடேசன், ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், துணை முதல்வர் பிரகாஷ், தமிழ்த்துறை தலைவர் சரளா, புவனேஸ்வரி பாலமுருகன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் திருவிக பிறந்தநாள் விழா: விஐடி பல்கலைக்கழக வேந்தர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvikha Birthday Celebration ,Kanchipuram ,VIT University ,Thiruvika ,Vellore ,Thiruvika Birthday Celebration ,
× RELATED காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில்...