×

குடிநீர் நிதியை வேறு பணிக்காக மாற்றியதை கண்டித்து விசிக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் பெரும்பேடு ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவ்வூராட்சியில், கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர் பிரச்னையை சரி செய்து, பொது மக்களுக்கு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பெரும்பேடு ஊராட்சியின் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வண்ணம் பாலாற்றிலிருந்து குடிநீர் கொண்டு வந்து வினியோகிக்க மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அந்த நிதியை அதிகாரிகள் வேறு பணிக்காக பயன் படுத்த முயற்சிப்பதாகவும் கூறப்பட்டது. இதனைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் கோமதி பெருமாள் தலைமையில், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், விசிக ஒன்றிய செயலாளர்கள் புரட்சி மணவாளன், இசிஆர் அன்பு, திருமணி சதீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட விசிக மத்திய மாவட்ட செயலாளர் கனல்விழி கண்டன உரையாற்றினார். தகவலறிந்து அங்கு வந்த ஒன்றிய சேர்மன் ஆர்.டி.அரசு மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலை செல்வன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில் பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதில், தொகுதி செயலாளர் பெருமாள், துணை செயலாளர் வேலு பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் நெடுமாறன், ஆதவன், தயாளன், நகர் செந்தில், பரமசிவம், கவியரசு, வீராபுரம் சிவா, வெங்கட், விஜயன், ஜெகன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post குடிநீர் நிதியை வேறு பணிக்காக மாற்றியதை கண்டித்து விசிக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Thirukkallukkunram ,Perumpedu Panchayat ,Thirukkallukkunram Union ,Chengalpattu District ,
× RELATED திருக்கழுக்குன்றத்தில் திமுக வேட்பாளர் பிரசாரம்