×

கலிபோர்னியா மாகாண சட்டமன்றத்தில் சாதி பாகுபாடுக்கு எதிரான மசோதா நிறைவேற்றம்: ‘கருப்பு நாள்’ என இந்து அமைப்பு கண்டனம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் முதல் மாகாணமாக கலிபோர்னியா சட்டமன்றத்தில் சாதி பாகுபாடுகளுக்கு எதிரான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பணியாற்றும், உயர்கல்வி பயிலும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம், கடல் கடந்து சென்றாலும் அங்கும் சாதி ரீதியாக விளிம்புநிலை சமூகங்கள் ஒடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

எனவே சாதி பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எஸ்பி 403 எனும் சாதி பாகுபாடுக்கு எதிரான மசோதாவை கலிபோர்னியா மாகாண சட்டமன்றத்தில் உறுப்பினர் ஆயிஷா வஹாப் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நேற்று முன்தினம் நடந்தது. இதில் 50 உறுப்பினர்கள் ஆம் என்றும் 3 பேர் இல்லை என்றும் வாக்களித்தனர். இதன் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இனி ஆளுநர் கையெழுத்துடன் இந்த மசோதா சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.

அமெரிக்காவில் சாதியை பாதுகாக்கப்பட்ட பிரிவில் சேர்க்கும் முதல் மாகாணம் கலிபோர்னியா என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பல்வேறு சமூக அமைப்புகள் வரவேற்றுள்ளன. ‘‘இந்த நடவடிக்கை மாகாணத்தில் எந்த இடத்திலும் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வாய்ப்பை உறுதி செய்யும்’’ என சமத்துவ ஆய்வக நிர்வாக இயக்குநர் தேன்மொழி சவுந்தரராஜன் கூறினார். அதே சமயம், கோஹ்னா எனும் வடஅமெரிக்காவின் இந்துக்கள் கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், ‘கலிபோர்னியா வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள். இது இந்து அமெரிக்கர்களை குறிவைத்து கொண்டு வரப்பட்ட மசோதா’ என கூறப்பட்டுள்ளது.

The post கலிபோர்னியா மாகாண சட்டமன்றத்தில் சாதி பாகுபாடுக்கு எதிரான மசோதா நிறைவேற்றம்: ‘கருப்பு நாள்’ என இந்து அமைப்பு கண்டனம் appeared first on Dinakaran.

Tags : California Legislature ,Hindu ,Black ,Washington ,California ,US ,America ,black day ,
× RELATED அனைத்து கோயில்களிலும் அறங்காவலர்...