×

கார் டிரைவரிடம் கெஞ்சிய சேலம்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மாஜி அமைச்சர் மீது இலை கட்சியில யாரு கோபத்துல இருக்காரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்ட மாஜி அமைச்சர் மணியானவர், சேலம்காரர் அணியில் இருந்து வர்றார். அவர், சேலம்காரர் அணியில் இருந்தாலும், தேனிக்காரருக்கு எதிராகவோ, சின்னமம்மிக்கு எதிரான கருத்துக்கள் எதுவும் பேசுவதில்லையாம். இதனால் கடலோர மாவட்ட சேலம்காரரின் ஆதரவாளர்கள் மாஜி அமைச்சர் மீது அதிருப்தியில் இருக்காங்களாம். அதாவது, தூங்கா நகரில் சேலம்காரர் அணி சார்பில் நடந்த மாநாட்டிற்கு கடலோர மாவட்டத்தில் இருந்து பெரிய அளவில் நிர்வாகிகளை மணியானவர் அழைத்து செல்லவில்லையாம். கட்சி செயல்பாட்டிலும் பெரிய அளவுக்கு ஈடுபாடும் இல்லையாம். வீடு தேடி செல்லும் நிர்வாகிகளையும் மதிப்பது இல்லையாம். கட்சி அலுவலத்திற்கும் செல்வது இல்லையாம்.

சேலம்காரர் அணியில் இருந்தாலும் செயல்பாடுகள் எல்லாம், ‘இல்லை’ என்ற தகவலே வருகிறதாம். இப்படி இருந்தால் நாடாளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது என்று சேலம்காரர் குழம்பி போய் உள்ளாராம். மேலும் கடலோர மாஜி அமைச்சர் மணியானவரால் அவர் வசிக்கும் மாவட்டத்தில் இலை கட்சிக்கு பின்னடைவுதான் என்ற தகவல் சேலத்துக்காரரின் காதுக்கு போய் உள்ளதாம். இதை கேட்ட மாஜி அமைச்சர் மணியானவர் மீது சேலம்காரர் உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறாராம். உண்ைமயில் அவர் நம்ம அணியில் இருக்கிறாரா அல்லது எதிர் அணியில் இருக்கிறாரா என்பதை ஓபனாக சொல்லிட்டு பிடிக்கவில்லையென்றால் விலகலாம். நஷ்டம் ஒன்றும் கிடையாது என்று சேலம்காரர் தன் ஆதரவாளர்களிடம் சொன்னாராம்.

மேலும், விரைவில் கடலோர மாவட்டத்தில் கட்சி மட்டத்தில் அதிரடி மாற்றம் இருக்கலாம் என்று நிர்வாகிகளே பேசிக்கிறாங்க. அதுல முதல் இடத்துல மணியானவர் இருக்கிறார் என்பதுதான் ஹைலைட்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘டிரைவருக்கு சேலம் விஐபி பயந்து கிடந்த கதையை சொல்லுங்க…’’ என்று ஆர்வத்துடன் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கொடநாடு பங்களா கொலை- கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியே மம்மியின் டிரைவராக இருந்த கனகம் என்ற பெயர் கொண்டவர்தானாம். அவர்தான் கேரளாவில் இருந்து கூலிப்படையை கொண்டு வந்து கொடநாட்டிற்குள்ளே செல்வது எப்படி என்று ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளாராம். கூலிப்படையை சேர்ந்த அனைவரும் சிக்கி சிறைக்கு போயிட்டாங்க.

ஆனால், ஸ்கெட்ச் போட்ட கனகமானவர் மட்டும் விபத்தில் பலியானதாக சொல்லப்படுது. அது இயற்கையான விபத்தா அல்லது ‘செட்’ செய்ததா என்ற விவகாரம் இன்னும் ஓடிக் கொண்டே இருக்கு, அது தனி கதை. இப்ப சொல்றது வேறு விஷயம். இலைக்கட்சியின் புதுத்தலைவரான சேலம்காரர், ‘கனகராஜை இனிமேல் மம்மியின் டிரைவருன்னு சொன்னா எனக்கு ரொம்ப கோபம் வரும்… கோர்ட்டுக்கு போய் கேசை போடுவேன்னு’ திடீரென கொந்தளிச்சிட்டாராம். மம்மிக்கு அவர் டிரைவரே இல்லன்னு அடிச்சி சொல்லிக்கிட்டு இருக்காரு. ஆனா அந்த கனகமானவர், சேலத்துக்காரருக்கு டப் கொடுத்த சம்பவமும் தற்போது வெளியாகி இலை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி இருக்காம்.

அதாவது, போயஸ் கார்டனில் இருந்த சின்னமம்மியின் குடும்பத்தை சேர்ந்த 11 பேரை கூண்டோடு மம்மி வெளியேற்றினாங்க. ஒரு மாதத்துக்கு பிறகு சின்னமம்மியை மட்டும் உள்ளே அழைச்சிக்கிட்டாங்க. அப்போது சின்னமம்மியை அழைக்கச் சென்ற டிரைவர் இந்த கனகமானவர் தானாம். அதே ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளரா சேலத்துக்காரர் இருந்தாரு. அப்போது நடந்த மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் வேட்பாளர் பட்டியலில் கனகமானவரின் அண்ணன் பெயரும் இருந்ததாம். இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சேலம்காரர் கோபத்தின் உச்சிக்கே போனாராம். அப்படி போனவர் போய் சேர்ந்த இடம் சென்னையில் இருந்த சின்னமம்மியிடம் தானாம். அவரை சந்தித்து, கனகமானவரின் அண்ணனை வேட்பாளராக ஏற்க முடியாது என்று காலில் விழுந்து அடம்பிடிக்காத குறையாக கெஞ்சி கேட்டாராம்.

ஆனா சின்னமம்மியோ மம்மி அறிவிச்ச வேட்பாளரை நான் மாற்ற முடியாது, கனகமானவரிடம் பேசி சமாதானம் செய்துவிடு, அவர் ஒத்துக்கிட்டா வேட்பாளரை மாற்றலாமுன்னு சொல்லிட்டாங்களாம். அதன்பிறகு நாலு நாட்கள் சேலத்துக்காரர் கனகமானவரிடம் கெஞ்சி கூத்தாடி சம்மதம் வாங்கினாராம். இப்படி, ஒரு கார் டிரைவர் கனகமானவரிடமே கெஞ்சியவர் தான் இப்போது கட்சியும் நானே.. பொதுச் செயளாரும் நானே.. என்று கூறி கொண்டு மாஜி அமைச்சர்களை மிரட்டுகிறாராம். ஒரு காலத்தில் டிரைவரிடம் கெஞ்சியவர் அதை மறைத்து இன்று தனி ராஜாங்கம் நடத்துவதாக நினைத்து கொண்டுள்ளார். கனகமானவரை மம்மிக்கு டிரைவரே இல்லைன்னு சொல்வது வேடிக்கையா இருக்குன்னு சேலத்துக்காருக்கு நெருக்கமானவர்கள் சொல்லி சிரிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எந்த அதிகாரியை கண்டித்து கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தப்போறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘குமரி மாவட்டத்தில் செங்கல் சூளை தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம் தொடங்கி, அடுத்ததாக கலெக்டர் ஆபீசுக்குள் குடியேறும் போராட்டம் வரைக்கும் நடத்த போறாங்களாம். இந்த மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர் பகுதிகளில் தான் அதிகமான செங்கல்சூளை இருக்குது.

இதற்கு தேவையான மண் எடுக்க அனுமதி கொடுங்க. விதிமுறையை பின்பற்றுங்க என்று சட்டமன்றத்திலேயே அமைச்சரு அறிவிச்சிட்டாரு. அந்த அறிவிப்பு மாவட்ட கனிம வளத்துறைக்கும் வந்திருக்கு. ஆனால் கனிம வளத்துறையில உள்ள அதிகாரிங்க இந்த பைலை கிடப்பில் போட்டு வைச்சுட்டாங்களாம். பின்னர் கலெக்டருக்கு விவகாரம் போய், அவரு விளக்கம் கேட்க, அப்போதும் பைல் மூவ் ஆகாமல் கிடப்பில் தான் உள்ளதாம். இதனால் செங்கல் சூளை தொழில் அழியும் நிலைக்கு வர தற்போது போராட்டம் வெடிச்சிருக்கு…’’ என்றார் விக்கியானந்தா.

The post கார் டிரைவரிடம் கெஞ்சிய சேலம்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Salemkar ,wiki ,Yananda ,Leaf Party ,Uncle ,Peter ,Kadalora district ,Dinakaran ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...