சென்னை: என்.ஐ.ஏ.விடம் இருந்து தனக்கு சம்மன் ஏதும் வரவில்லை என நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். ஆதிலிங்கம் 3 ஆண்டுகளுக்கு முன் உதவியாளராக இருந்ததாகவும், தற்போது எந்த தொடர்பிலும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார். கேரளாவின் விழிஞ்சம் கடல் பகுதியில் சிறிய படத்தின் மூலம் கடந்த 2021ம் ஆண்டு 327 கிலோ ஹெராயின் 5 ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் ஆயிரத் தோட்டாக்கள் கடலோர பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை, திருவள்ளூர் உட்பட்ட தமிழகத்தின் பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்த வழக்கில் ஆதி லிங்கம் என்பவரை சென்னையில் வைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆதி லிங்கம் ஏற்கனவே சென்னையில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் குணசேகரனின் கூட்டாளி என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் கேரளாவின் விழிஞ்சம் கடற்கரைப் பகுதியில் 300 கிலோ ஹெராயின் மற்றும் ஏகே 47 பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆதிலிங்கம், நடிகை வரலட்சுமி உதவியாளராக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக நடிகை வரலட்சுமிக்கு தேசிய புலனாய்வு முகமை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக எனக்கு எந்த சம்மனும் அனுப்பப்படவில்லை என நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
ஆதிலிங்கம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியதாக வெளியான தகவல் தவறானது என்றும் வரலட்சுமி தெரிவித்துள்ளார். 3 ஆண்டுக்கான ஒப்பந்தப்படி Freelance Manager ஆகவே ஆதிலிங்கம் எனக்கு பணிபுரிந்தார் என்றும், ஒப்பந்தம் முடிந்த பின்னர் அவருடன் எந்தவித தொடர்பிலும் நான் இல்லை என்றும் நடிகை வரலெட்சுமி சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
The post என்.ஐ.ஏ.விடம் இருந்து தனக்கு சம்மன் ஏதும் வரவில்லை: நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கம்! appeared first on Dinakaran.