×

பாரம்பரிய உடையணிந்து கோயில்களில் வழிபாடு சென்னை, குமரி, பாலக்காட்டில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்: கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி: கேரளாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஓணம் பண்டிகை முக்கியமானதாகும். கேரளாவை ஆட்சி செய்த மகாபலி மன்னர் ஆண்டுக்கு ஒருமுறை நாட்டு மக்களை காண வருவதாக ஐதீகம் அவர் வருகையை நினைவு கூரும் வகையில் தான் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். 10வது நாள், திருவோணத்தன்று ஓணம் கொண்டாட்டம் நடக்கும். இந்தாண்டுக்கான ஓணம் கொண்டாட்டம் அஸ்தம் நட்சத்திரமான கடந்த 20ம் தேதி தொடங்கியது. இன்று திருவோணம் கொண்டாட்டம் நடக்கிறது. சென்னை: சென்னையில் மலையாள மொழி பேசும் மக்கள் பரலாக உள்ளனர். இவர்கள் இன்று ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். முன்னதாக இவர்கள், அதிகாலைலேயே எழுந்து குளித்து விட்டு பாரம்பரிய உடை அணிந்து கோயில்களில் தரிசனம் செய்தனர். வீடுகளில் அத்தப்பூ இட்டும், அறுசுவை விருந்து படைத்தும் கொண்டாடினர். இன்றைய தினம், சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 2ம் தேதி பணி நாளாக செயல்படும் என சென்னை மாவட்ட கலெக்டர்ட அறிவித்துள்ளார். அதே போல வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்கா இன்று இயங்கியது. எப்பொழுதுமே செவ்வாய்க்கிழமை பூங்காவிற்கு விடுமுறை என்ற நிலையில் ஓணம் பண்டிகையை ஒட்டி திறந்திருக்கும் என அறிவித்திருந்ததால் ஏராளமானோர் குவிந்தனர்.

பாலக்காடு: பாலக்காடு மாவட்ட நிர்வாகம், சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில், சுற்றுலா தலங்களில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதை கேரள உள்ளாட்சி மற்றும் கலால் துறை அமைச்சர் ராஜேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும் பாலக்காடு மாவட்டத்தில் மலம்புழா, காஞ்ஞிரப்புழா, போத்துண்டி, மங்கலம் டேம், நெல்லியாம்பதி, கிருஷ்ணபுரம் பாப்புஜி பார்க், அட்டப்பாடி அமைதி பள்ளத்தாக்கு ஆகிய சுற்றுலா தலங்கள் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோவை: கோவையில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மலையாள மக்கள், தங்களது வீட்டு முன்பு அதிகாலையில் அத்தப்பூ கோலமிட்டனர். கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் காலை முதலே பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோயிலில் செண்டை மேளம் முழங்க மூல தெய்வமான ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், குந்தா, கோத்தகிரி மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் மலையாள மொழி பேசும் மக்கள், புத்தாடைகளை உடுத்தி ஓணம் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். ஊட்டியில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் ஓணம் சத்தியா விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்ததால் களைகட்டியுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிற கேரளாவை சேர்ந்த பலரும் தங்களது வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிட்டனர். திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலிலும் அத்தப்பூ கோலமிடப்பட்டிருந்தது. மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரி நிறுவனங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்று திருப்பூர் சந்தைகளில் பூக்கள் விலை உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஈரோடு மாவட்டத்திலும் மலையாள மக்கள் அதிகளவில் வசிப்பதால் அவர்கள் ஓணம் கொண்டாடி மகிழ்ந்தனர். குமரி: கேரளாவையொட்டி உள்ள குமரி மாவட்டம் மார்த்தாண்டம், தக்கலை, அருமனை உள்ளிட்ட பகுதிகளில் ஓணம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதிகாலையிலேயே வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டனர். பின்னர் கசவு என்று சொல்லக்கூடிய வெண்ணிற புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். குறிப்பாக பெருமாள் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர். பின், வீடுகளில் ஓணம் ஊஞ்சல், ஓணப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் மூலம் மகிழ்ச்சியாக இருந்தனர்.

புத்தரிசி மாவில் அடை, அடை பிரதமன், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், அவியல், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரை புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிகறி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, அப்பளம், சீடை, ஊறுகாய், பால் பாயாசம், அடை பாயாசம், சிறு பருப்பு பாயாசம் என பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களை சமைத்து குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். தோவாளை பூ மார்க்கெட்டில் நேற்று அதிகாலையில் இருந்து இன்று அதிகாலை வரை விடிய விடிய பூக்கள் விற்பனையும் நடந்தது. கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கேரளாவில் உள்ள நிறுவனங்களில் வேலைபார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் பலரும் வந்திருந்தனர். காலையில் சூரிய உதயத்தை பார்த்ததோடு கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று ரசித்தனர்.

The post பாரம்பரிய உடையணிந்து கோயில்களில் வழிபாடு சென்னை, குமரி, பாலக்காட்டில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்: கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Onam ,Chennai, Kumari ,Palakkad ,Kanyakumari ,Kerala ,King ,Mahabali ,Chennai, ,Kumari ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில்...