×

ஜோலார்பேட்டை அருகே ₹60 லட்சத்தில் 2 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி

*எம்எல்ஏ ஆய்வு

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே ₹60 லட்சம் மதிப்பீட்டில் 2 பள்ளிகளில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி தெற்கு ஒன்றியம், அச்சமங்கலம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் மாக்கனூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த இரண்டு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கூடுதலாக வகுப்பறை கட்டிடம் இல்லாமல் ஒரே வகுப்பறையில் இரண்டு வகுப்புகள் நடத்தப்படும் நிலை ஏற்பட்டது. இதனால் இரண்டு பள்ளிகளுக்கும் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க.தேவராஜியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு பள்ளிகளுக்கும் தலா ₹30 லட்சம் வீதம் ₹60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், எம்எல்ஏ க.தேவராஜி நேற்று முன்தினம் அச்சமங்கலம் மற்றும் மாக்கனூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் இரண்டு பள்ளிகளிலும் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக்குமார், மு.ஒன்றிய அவைத்தலைவர் மாணிக்கம், ஒன்றிய துணை செயலாளர் சம்பூர்ணம், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் ஹேமாவதி, பூரிகமானிமிட்டா ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் சதீஷ் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் என பலர் உடன் இருந்தனர்.

The post ஜோலார்பேட்டை அருகே ₹60 லட்சத்தில் 2 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி appeared first on Dinakaran.

Tags : Jolarpet ,MLA Study ,Jolarbate ,Zolarpet ,Dinakaran ,
× RELATED ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட...