×

நாட்றம்பள்ளி அருகே உள்ள சிகரணபள்ளி கிராமத்தில் ஆக்கிரமிப்பு ஏரி நீர்வரத்து கால்வாயை மீட்டு தர வேண்டும்

*குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

திருப்பத்தூர் : நாட்றம்பள்ளி அருகே சிகரணபள்ளி கிராமத்தில் ஆக்கிரமிப்பு ஏரி நீர்வரத்து கால்வாயை மீட்டு தர வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், முதியோர் ஓய்வூதியம், வீட்டு மனை பட்டா, கல்விக்கடன், வேலை வாய்ப்பு, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள் நல திட்ட உதவிகள் என மொத்தம் 328 பொதுநல மனுக்கள் பொதுமக்கள் கலெக்டர் மற்றும் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் வழங்கினர்.

அதில், தகுதியுள்ள மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது: திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுவில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் வைத்துள்ளனர். அதனை உடனடியாக மக்களின் குறைகள் என்ன என்று கேட்டறிந்து உடனடியாக அதற்கு பதில் தர வேண்டும். மேலும் ஒரு வருடம், ஆறு மாத காலமாக தீர்க்கப்படாத மனுக்கள் உள்ளது. இந்த மனுக்களை ஏன் அதிகாரிகள் வைத்துள்ளனர். எந்தெந்த துறைகளில் இந்த மனுக்கள் உள்ளதோ அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.

பின்னர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அதிகாரிகளிடம் பேசுகையில், ‘தற்போது மாவட்டத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கொடுத்த மனுக்கள் அனைத்தும் நிலுவையில் இல்லாமல் இருந்து வருகிறது. ஆகையால் தான் தற்போது குறைத்தீர்வு கூட்டத்தில் மனுக்கள் குறைவாக வருகிறது. இதேபோல் அதிகாரிகள் மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டால் மாநிலத்தில் முதலாவது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் வரும்.

பொதுமக்கள் நிலம், வழி பிரச்னை உள்ளிட்டவைகள் சம்பந்தமாக அதிக அளவில் மனுக்களை தருகின்றனர். அந்த மனுக்கள் வருவாய் துறை மூலம் தீர்வு காணப்படும். ஆனால், சொத்து பிரச்னையை குறைதீர்வு கூட்டத்தில் தீர்க்க முடியாது. எனவே, பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடி வழக்குகள் தொடுத்து அதற்கான தீர்வை தேடிக் கொள்ள வேண்டும். கலெக்டரிடம் மனு கொடுத்தால் சொத்து பிரச்னையை தீர்த்து வைக்க முடியாது. எனவே மக்கள் தேவையான மனுக்களை மட்டும் குறைத்தீர்வு கூட்டத்தில் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
திருப்பத்தூர் அடுத்த நாட்றம்பள்ளி அருகே உள்ள சிகரணபள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

சிகரண பள்ளியில் ஏரிக்கால்வாய் உள்ளது. இந்த பகுதியின் நீர்வரத்து கால்வாயை தற்போது அதே பகுதியை சேர்ந்த நபர்கள் ஆக்கிரமித்து வீடு கட்டி வருகின்றனர். இதனால் உபரி நீர் வெளியேறாமல் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினரிடம் தெரிவித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர் என்று மனு அளித்தனர்.

ஆண்டியப்பனூர் ஓடை மீனவர் சங்கத்தினர் அளித்த மனுவில், ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கத்தில் மீன்வளத்துறை சார்பில் அனேரி மீனவர் சங்கம் குத்தகைக்கு எடுத்து மீன் பிடித்து வருகிறோம். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ரத்தினம் என்பவர் இரவு நேரங்களில் மீன்பிடித்தது சம்பந்தமாக காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும். ஆனால் ரத்தினம் என்பவர் புதிதாக மீனவர் சங்கம் ஆரம்பிக்க கலெக்டரிடம் மனு அளித்துள்ளார் என்பது தெரிய வந்தது. எனவே இந்த மனு மீது விசாரணை மேற்கொண்டு மீனவ இன மக்களுக்கு மட்டுமே மீன்பிடிக்க குத்தகை விட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் அடுத்த குரிசிலாபட்டு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் பிரகாசம் என்பவர் அளித்த மனுவில் குரிசிலாப்பட்டு ஊராட்சியில் வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கையூட்டு பெற்றுக் கொண்டு ஓய்வு மீண்டும் வேலை வழங்கியுள்ளார். இது சம்பந்தமாக பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று மனு அளித்துள்ளார்.

ஆம்பூர் அடுத்த சுட்டகுண்டா பகுதியை சேர்ந்த கீதா என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:சுட்டகுண்டா ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சமையல் உதவியாளராக பணியாற்றி வருகிறேன். இந்நிலையில் எங்கள் பகுதியை சேர்ந்த ஆந்திராவில் படித்த பெண்ணுக்கு சமையல் பொறுப்பாளர் பதவி வழங்கியுள்ளனர். நான் இன்ஜினியரிங் படித்து பட்டதாரி பெண்ணாக இருக்கும் போது காலை உணவு திட்ட பொறுப்பாளர் பணி எனக்கு வழங்காமல் ஆந்திராவில் படித்த பெண்ணுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.

தாமலேரி முத்தூர் கிராமத்தை சேர்ந்த வளர்மதி என்பவர் அளித்த மனுவில், எனது மகள் மற்றும் மருமகன் இறந்து விட்டனர். அவர்களுக்கு மன வளர்ச்சி குன்றிய குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு மாதந்தோறும் மாற்றுத்திறனாளி நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. தற்போது 5 மாதங்களாக இந்த நிதி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மனநலம் பாதித்த எனது பேத்திக்கு எந்த ஊரு பணியும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. ஒருவேளை உணவுக்கு கூட நாங்கள் கஷ்டப்பட்டு வருகிறோம் என்று கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த பெண்ணுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.

ஆம்பூர் சாணாங்குப்பம் பகுதியை சேர்ந்த சாந்தகுமாரி என்பவர் அளித்த மனுவில், திருமணம் ஆகி 22 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு மனவளர்ச்சி குன்றிய ஒரு மகன் உள்ளார். எனது கணவர் கருத்து வேறுபாடு காரணமாக என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். மன வளர்ச்சி குன்றிய மகனை என்னை பார்க்க அனுமதிக்காமல் எனது கணவர் இருந்து வருகிறார். எனது மகனை ஒரு அறையில் பூட்டி வைத்து இயற்கை உபாதைகள் அந்த அறையிலேயே கழித்து துர்நாற்றம் வீசும் நிலையில் இருந்து வருகிறார். உடனடியாக எனது மகனை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளித்தார்.

ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த தாமரை வேணி என்பவர் அளித்த மனுவில், எனது கணவர் சாந்தகுமார் காவல்துறையில் பணியாற்றி வந்தார். கடந்த 2004ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் 2018ம் ஆண்டு அவர் இந்த வேதனையில் இறந்து விட்டார். அவருக்கு கிடைக்க வேண்டிய செட்டில்மெண்ட் பணம் மற்றும் பென்ஷன் உள்ளிட்டவைகள் வழங்கப்படாமல் உள்ளது இதனை பெற்றுத் தரவேண்டும் என கூறியுள்ளார்.

அனைத்து மனுக்களையும் பெற்றுக் கொண்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் துறைவாரியாக அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்து ஒரு வார காலத்திற்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இதில், ஊராட்சிகளின் இணை இயக்குனர் விஜயகுமாரி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காவல்துறையை அவதூறாக பேசிய மாஜி ராணுவ வீரர்

மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றபோது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நடந்த பேச்சு, கட்டுரை போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பரிசுகளை வழங்கினார். அதன் பின்னர் அனைத்து மாணவர்களுடன் ஒன்றிணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விலாங்குப்பத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரவி, அங்கு பணியில் இருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷிடம் தன்னை அலுவலகத்திற்கு அனுமதிக்குமாறு கேட்டார்.

அதற்கு மாவட்ட கலெக்டர் வெளியில் உள்ள மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெற்ற பின்பு தான் மற்ற பொது மக்களை உள்ளே அனுப்ப முடியும் என தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ரவி என்னையே நீ அனுப்ப மாட்டாயா என்று பேசி தகராறு செய்துள்ளார். பொதுமக்களுக்காக குறைதீர்வு கூட்டம் நடக்கும்போது போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டார். இதனால் காவல்துறையினருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கும் தகராறு ஏற்பட்டது. உடனடியாக அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு நாளை மறுதினம் விசாரணைக்கு ஆஜராக காவல்துறையினர் உத்தரவிட்டனர்.

The post நாட்றம்பள்ளி அருகே உள்ள சிகரணபள்ளி கிராமத்தில் ஆக்கிரமிப்பு ஏரி நீர்வரத்து கால்வாயை மீட்டு தர வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Piganapalli ,Nadrampalli ,Manu Thirupattur ,Awakaranapalli ,Pigaranapalli village ,Dinakaran ,
× RELATED ஒருதலை காதல் விவகாரம் மாணவியை கொன்ற தாய்மாமன் தற்கொலை