×

அரியலூரில் அரசு திட்டப் பணிகள் ஆய்வு மக்கள் பிரதிநிதிகளின் மனுக்களுக்கு முன்னுரிமை

*அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்

அரியலூர் : மக்கள் பிரதிநிதிகள் வழங்கும் மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
அரியலூரில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு நடத்தினார். இதில் அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி , கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, அரசு செயலாளர் சிறப்பு திட்ட செயலாக்கம் தரேஸ் அஹமது, எம்எல்ஏக்கள்அரியலூர் சின்னப்பா , ஜெயங்கொண்டம் கண்ணன் முன்னிலை வகித்தனர்.

இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசின் சார்பில் செயல்படுத்தபடும் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அரசு துறைகளின் சார்பில் 1,735 பயனாளிகளுக்கு ரூ,10,56,50,400 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது,மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வழங்கும் மனுக்களின் மீது அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதே போன்று கல்வி, மருத்துவ உதவிக் கேட்டு வரும் மனுக்களின் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் வழங்கும் மனுக்களுக்கும் முன்னுரிமை அளித்து தீர்வு காண வேண்டும். நேற்று ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு துறை சார்ந்தும் தெரிவித்தபடி முடிக்க வேண்டிய பணிகளின் கால அளவிற்குள் பணிகளை முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதலமைச்சர் தெரிவித்ததை போன்று ஏழை, எளிய மக்கள் வழங்கும் மனுக்களை வெறும் காகிதமாக பார்க்காமல் அவர்களது வாழ்க்கையாக உணர்ந்து பார்ப்பதுடன் அவர்களது மனுக்களை நிராகரிக்காத வகையில் மனுக்களுக்கு தீர்வு காணவேண்டும். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

நிகழ்ச்சியில் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) பாலமுரளி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர்(பொ) ஆறுமுகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், விஜயலட்சுமி, கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் உத்தண்டி, அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், வருவாய் கோட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதாரத்துறை, மாவட்ட நிலை அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அரியலூரில் அரசு திட்டப் பணிகள் ஆய்வு மக்கள் பிரதிநிதிகளின் மனுக்களுக்கு முன்னுரிமை appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Minister ,Udhayanidhi Stalin ,People's Representatives ,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...