×

தோகைமலை, கடவூர் ஒன்றிய பகுதிகளில் மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் அதீத ஆர்வம்

* லாபம் ஈட்டும் வழிமுறைகள் என்ன?

* முன்னோடி விவசாயிகள் ஆலோசனை

தோகைமலை : கடவூர், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் மிளகாய் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மிளகாய் சாகுபடியில் அதிக மகசூல் பெற்று லாபம் ஈட்டும் வழிமுறைகள் குறித்து முன்னோடி விவசாயி திருமாணிக்கம் தெரிவித்துள்ள ஆலோசனை:

மிளகாய் சாகுபடி செய்யும் போது மானாவாரி மற்றும் இறவையில் பயிரிடுவதற்கு கோ 1, கோ 2, கோ 3, பிகேஎம் 1 ஆகிய ரகங்கள் ஏற்றவையாக ஆகும். இதில் கோ 1 என்ற ரகமானது சாத்தூர் சம்பா ரகத்தின் மறுதேர்வு ஆகும். இந்த வகை மிளகாய் பழங்கள் நீளமாக வெளிர் சிவப்பு நிறத்துடன் காணப்படும். இந்த ரகத்தை ஒரு எக்டேரில் சாகுபடி செய்தால் 210 நாட்களில் 2.1 டன் காய்ந்த மிளகாய் மகசூல் கிடைக்கும்.

இதேபோல் கோ 2 என்பது நம்பியூர் நாட்டு ரகம் வகையை சேர்ந்தது. இந்த ரக மிளகாய் பழங்கள் அடர் சிவப்பு நிறமாகவும், அதிகமான அளவு விதையுடன் காரத்தன்மை கொண்டதாகவும் இருக்கும். இந்த ரகத்தை சாகுபடி செய்யும் போது பச்சை மற்றும் சிவப்பு நிறம் இருக்கும் போது அறுவடை செய்யப்படுகிறது. இந்த வகை ரகத்தை ஒரு எக்டேரில் சாகுபடி செய்யும் போது 210 நாட்களில் காய்ந்த மிளகாய் 2.2 டன் அளவில் கிடைக்கும்.

கோ 3 என்ற ரகமானது திறந்த மகரந்த சேர்க்கை வகையில் இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்டது ஆகும். இந்த வகை மிளகாய் சாகுபடியின் போது 30 செமீ அகலத்தில் 15 செமீ நீளத்தில் இடைவெளி இட்டு நெருக்க பயிரிடுவதால் அதிகமான காற்றுக்கு தாங்கக்கூடியதாக உள்ளது. இந்த வகை ரகத்தை ஒரு எக்டேரில் சாகுபடி செய்தால் 165 நாட்களில் 3 முதல் 3.5 டன் காய்ந்த மிளகாயும், 15 முதல் 18 டன் அளவில் பச்சை மிளகாயும் மகசூல் கிடைக்கிறது.

மேலும் 2000ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கோ 4 என்ற ரகம் திறந்த மகரந்த சேர்க்கை வகையில் இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ரக மிளகாயை சட்னி, பொறியல் மற்றும் ஊறுகாய் செய்வதற்கு உகந்ததாக உள்ளது. இது குறைவான காரத்தன்மை கொண்டதோடு ஒரு எக்டேருக்கு 165 நாட்களில் 23 டன் பச்சை மிளகாய் மகசூல் கிடைக்கிறது. இந்த வழி முறைகளில் மிளகாய் சாகுபடி செய்தால் விவசாயிகள் அதிக மகசூல் பெற்று லாபம் பெலாம் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

மிளகாய் சாகுபடிக்கு ஏற்ற பருவம்

மிளகாய் சாகுபடி செய்வதற்கு நல்ல வடிகால் வசதியுடன் கூடிய நிலங்களை அமைக்க வேண்டும். வெப்பப் பிரதேசங்களில் மிளகாய் நன்றாக வளரும். ஊறைபனி இல்லாத 20-250 சென்டி கிரேட் வரை இருக்கக்கூடிய வெப்பம் இருப்பது ஏற்றது ஆகும். மானாவாரியிலும் இறவையிலும் பயிரிடலாம்.

நிலத்தை 4 முறை உழுது கடைசி உழவின் போது எக்டேருக்கு 25 டன் தொழு எரு அல்லது மக்குகுப்பை இட்டு 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைத்து பயிருக்கு பயிர் 30 செமீ இடைவெளியில் நட வேண்டும். மிளகாய் சாகுபடியை ஜனவரி, பிப்ரவரி, ஜூன், ஜூலை, செப்டம்பர் ஆகிய மாதங்களில் சாகுபடியை தொடங்குவதற்கு ஏற்ற பருவம் ஆகும்.

அறுவடை எப்போது?

பச்சை மிளகாய் அறுவடை செய்வதற்கு நடவு செய்து 75 நாட்கள் அல்லது விதைத்த 105 நாட்களில் அறுவடை செய்யலாம். பழுத்த பழங்களை ஒரு மாதத்திற்குப் பின்னும் அறுவடை செய்யலாம். மேலும் 3 முதல் 4 மாதங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். முதல் 2 பறிப்புகளில் இருந்து பச்சை மிளகாயும், அடுத்த பறிப்பில் இருந்து பழுத்த மிளகாயும் அறுவடை செய்யலாம்.

The post தோகைமலை, கடவூர் ஒன்றிய பகுதிகளில் மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் அதீத ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Doghaimalai ,Kadavur Union ,Pioneer Farmers Consulting ,Dogaimalai ,Kadavur ,Dogimalai Union ,Dinakaran ,
× RELATED பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை...