×

திறமைக்கு என்றும் அங்கீகாரம் கிடைக்கும்!

நன்றி குங்குமம் தோழி

மோகினியாட்ட கலைஞர் ரேகா ராஜு

ஒருவரின் எதிர்காலத்தினை நிர்ணயம் செய்வதில் மிகவும் முக்கிய பங்கு கல்விக்கு உண்டு. நன்றாக படிச்சா நல்ல வேலை, கை நிறைய சம்பாத்தியம் கிடைக்கும். ஆனால் அப்படிப்பட்ட படிப்பினால் நல்ல உயர்ந்த நிலையில் இருந்தவர்… தனக்கு பிடிச்ச துறையான நடனத்தை தேர்வு செய்து, அதிலும் ஒருவரால் ஜெயிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார் பெங்களூரைச் சேர்ந்த ரேகா ராஜு. ‘‘கல்வி என்றால் கணிதம், கணினி, ஆங்கிலம் என்பது மட்டுமில்லை. நடனமும் ஒருவித கல்விதான். நான் இந்த துறையை தேர்வு செய்த போது வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் என்னிடம் இதில் என்ன எதிர்காலம் இருக்குன்னுதான் பேசினாங்க.

ஆனால் இப்போது என்னுடைய நடன திறமையை பார்த்து அவர்களே அதனை பாராட்டி வருகிறார்கள்’’ என்று கூறும் ரேகா, மோகினியாட்டம் மூலம் பலரின் மனதை கவர்ந்து வருகிறார். பெங்களூர், சென்னை, தமிழகம் முழுதும் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் இவர் தன் நடனத்தினை அரங்கேற்றி வருகிறார். தற்போது மத்திய அரசின் கலைக்கு உரிதான தன்னுடைய அனைத்து செயல்திறனுக்காக ‘ஓவரால் பர்ஃபார்மர்’ என்ற விருதினை பெற்றுள்ளார்.

‘‘இந்த விருதினை முதல் முறையா இந்த வருடம்தான் அறிவிச்சிருக்காங்க. கலைத் துறை சார்ந்த இளம் தலைமுறையினருக்கு அவர்களின் துறைக்கு ஏற்ப மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அதில் நடனத்தில் பரதம், குச்சிப்புடி என ஒவ்வொரு துறை சார்ந்து தனிப்பட்ட விருதுதான் வழங்கி வந்தாங்க. இந்த முறை நடனம், சமூக சேவகி, எழுத்தாளர், நடன ஆசிரியர் என என்னுடைய அனைத்து சேவைகளுக்காக இந்த விருதினை எனக்கு வழங்கியுள்ளனர். இந்த விருது பத்மக்கு இணையான விருது. அப்படிப்பட்ட விருது எனக்கு கிடைச்சிருக்குன்னு நினைக்கும் போது ரொம்பவே பெருமையா இருக்கு.

என் பூர்வீகம் தமிழ்நாடு, கேரளா என்று தான் சொல்லணும். காரணம், என் அப்பா தமிழ்நாட்டை சேர்ந்தவர். அம்மா கேரளா. நான் இப்போது பெங்களூரில் வசித்து வருகிறேன். அம்மா நல்லா பாடுவாங்க. அப்பா தொழிலதிபர்‌ என்றாலும்‌ நாடகக் கலைஞரும் கூட. மேடை நாடகங்களில்‌ நடிச்சிருக்கார். கலை ஆர்வம்‌ கொண்ட குடும்பம்‌ என்பதால் எனக்கும் சின்ன வயசில் இருந்தே நடனம் மேல் தனிப்பட்ட ஈடுபாடு இருந்தது.

மூன்றரை வயசில் அம்மா என்னை பரதப் பள்ளியில் சேர்த்தாங்க. எட்டு வயது வரை நான் நடனப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன். அப்பாவின் தொழிலில் நஷ்டம் ஏற்பட என்னால் தொடர்ந்து நடனப் பயிற்சி எடுக்க முடியல. ரொம்பவே நொடிஞ்சு போயிட்டோம். வீட்டு சூழ்நிலை காரணத்தால், மூன்று வருஷம் என் நடனப் பயிற்சி தடைப்பட்டது. பணம் கட்டினால் பயிற்சின்னு சொல்லிட்டாங்க. சில காலத்தில் அப்பாவின் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட, நாங்களும் உயர ஆரம்பிச்சோம்‌. தடைப்பட்ட என் நடனப் பயிற்சியை மீண்டும் தொடர்ந்தேன்.

என் நடனப் பள்ளியில்‌ பரதம்‌ மட்டுமில்லை, மோகினியாட்டம்‌, குச்சுப்புடி, கதகளி என எல்லா நடனமும் சொல்லிக் கொடுத்தாங்க. நான் பரதம் கற்றுக் கொண்டாலும், ஒரு நாள் மோகினியாட்டம்‌ நடனம் பார்க்க வாய்ப்பு கிடைச்சது. எனக்கு அந்த நடனத்தின்‌ நளினம்‌ பிடிச்சு போக அம்மாவிடம் சொன்னேன். அவங்க சம்மதிக்க அப்படித்தான் நான் மோகினியாட்டம் கற்றுக் கொள்ள ஆரம்பிச்சேன். இதற்கிடையில்‌ என்னுடைய கல்லூரி படிப்பும் முடிஞ்சது.

இடையில் நான் சி.ஏ படிச்சேன். அந்தப் படிப்பும் முடிஞ்சு வேலையிலும் இணைந்தேன். ஆனால் நடனம் மேல் இருந்த ஆர்வத்தினால் வேலையினை விட்டுவிட்டு முழுமையா என் கவனத்தை நடனத்தில் செலுத்தினேன். மாஸ்டர்‌ ஆப்‌ பர்ஃபார்மிங்‌ ஆர்ட்ஸ்‌ மற்றும் எம்‌.பி.ஏ படிச்சேன். பிறகு மோகினியாட்டத்தில் பி.எச்‌.டி மற்றும்‌ டாக்டரேட்‌ பட்டமும்‌ பெற்றேன்‌” என்றவர்‌, வசதியில்லாத குழந்தைகளுக்கு இலவசமாக நடனப் பயிற்சி அளித்து வருகிறார்.

“எனக்கு தெரிந்த கலையை மற்றவர்களுக்கும்‌ சொல்லித்‌தர விரும்பினேன். மோகினியாட்டம்‌ மற்றும்‌ பரதம்‌ இரண்டும்‌ என் பயிற்சி பள்ளியில் கற்றுத் தருகிறேன். குறிப்பா வசதியற்ற குழந்தைகளுக்கு. காரணம்‌, நான்‌ பட்ட கஷ்டம்‌ இந்த குழந்தைகளும் அனுபவிக்கக் கூடாது என்பதால். மேலும் வசதி இல்லை என்ற ஒரே காரணத்தால் விரும்பிய நடனத்தை பயில முடியாமல் போகக்கூடாது என்று முடிவு செய்தேன். கலை எல்லோருக்குமானது.

அதை காசிற்காக பாகுபாடு பார்க்க நான் விரும்பல. கடந்த வருஷம் முதல் பள்ளிகளில் தேசியக் கல்வி கொள்கையினை அறிமுகம் செய்திருக்காங்க. அதாவது பள்ளிப் பாடங்கள் மட்டுமில்லாமல் கலைச் சார்ந்த நடனம், பாட்டு, இசை போன்றவற்றையும் தனிப்பட்ட பாடமாக இணைக்க வேண்டும் என்பதுதான் இந்த கொள்கையின் முக்கிய நோக்கம். அதன் அடிப்படையில் கர்நாடகாவில் இரண்டு பள்ளிகளில் இந்த கொள்கைகளை கடைப்பிடிக்க ஆரம்பித்து இருக்காங்க. அந்த இரண்டு பள்ளிகளுக்கும் நான் நடனம் சார்ந்த பாடங்கள் மற்றும் நடன ஆசிரியர்என உதவி செய்து வருகிறேன். கடந்த ஆண்டுதான் இந்த கொள்கையினை கொண்டு வந்தாங்க. அதேபோல் வரும் ஆண்டுகளில் 40% பள்ளிகளில் இதை கடைபிடிப்பாங்க என்று நம்புகிறேன். இந்த திட்டத்தில் நடனம், இசை, பாட்டு என ஒரு தனிப்பட்ட பாடமாகத்தான் கடைபிடிப்பார்கள். தேர்வு எழுதி அதில் தேர்ச்சிப் பெற வேண்டும். எல்லா குழந்தைகளும் படிப்பில் ஆர்வமாக இருப்பார்கள் என்று சொல்லிட முடியாது.

சிலருக்கு நடனம், பாட்டு போன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஒரு பாடமாக அதை பள்ளியில் படிக்கும் போது, அதையே அவர்கள் தங்களின் துறையாக தேர்வு செய்யலாம். அவ்வாறு தேர்வு செய்பவர்கள் பிற்காலத்தில் பெரிய நடன கலைஞராக மாறலாம், அல்லது நடனப் பயிற்சி பள்ளியினை நிர்வகிக்கலாம், பள்ளியில் நடன ஆசிரியராகவும் வேலை பார்க்கலாம். இன்றைய போட்டி நிறைந்த உலகில் மாணவர்களுக்கு பல துறைகளில் வாய்ப்புகள் உள்ளன. அதில் அவர்களின் திறமைக்கு ஏற்ப தேர்வு செய்ய இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றவர், அரசு மற்றும் பழங்குடியினர் பள்ளி மாணவர்களுக்கு பர்சனாலிட்டி மேம்படுத்துவது, பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்வது, போட்டி நிறைந்த உலகில் எவ்வாறு சாதிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

‘‘என்னுடைய பயிற்சி பள்ளி துவங்கி 20 வருஷமானாலும் மோகினியாட்டம் குறித்து மக்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே என் பள்ளியின் கிளைகளை விரிவு படுத்தி வருகிறேன். தற்போது ெபங்களூரில் மற்றொரு கிளையும் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் ஒன்றும் துவங்கி இருக்கிறேன். என்னுடைய மாணவிகள்தான் அதனை நிர்வகித்து வருகிறார்கள். 20வது ஆண்டு என்பதால் 20 நிகழ்ச்சிகளை இந்த ஆண்டு செயல்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கேன்.

நடனம் சார்ந்து மட்டுமில்லாமல் ஒருவரின் மனநிலை, கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் மேம்படுத்துவது என திட்டமிட்டிருக்கேன். மேலும் இப்போது பலர் வேலைபளு காரணமாக டிப்ரெஷனில் பாதிக்கப்பட்டு இருக்காங்க. இவர்களின் மனதினை ரிலாக்ஸ் செய்யக்கூடிய நடன அசைவுகள் குறித்து வர்க்‌ஷாப்பும் இதில் அடங்கும்.

கடந்த ஆண்டு லண்டன், பிரான்ஸ், ஆஸ்திரியா, கிரீசுக்கு நிகழ்ச்சிக்காக போயிருந்தேன். என்னுடைய நிகழ்ச்சி பொதுவாக நடனம் மட்டுமில்லாமல், நம்முடைய நடனம் மற்றும் கலாச்சாரம் குறித்து வெளிநாட்டினருக்கு எடுத்துரைத்த பிறகுதான் என் நடன நிகழ்ச்சி துவங்கும். இதில் பலருக்கு பரதம் மற்றும் மோகினியாட்டம் இரண்டுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. இரண்டும் நடன கலைதான். என்றாலும் சின்னச் சின்ன வித்தியாசங்கள் இருக்கும். மோகினியாட்டம்‌ கேரளாவின்‌ பாரம்பரிய நடனம்‌. இந்த நடனத்திற்கான காஸ்ட்யூம் எப்போதும் வெள்ளை நிறம் தான். இந்த நடனம்‌ காற்றில்‌ செடி கொடி மற்றும்‌ தண்ணீரின் அலை போல மிகவும்‌ நளினமானது. அரைமண்டியில்தான் நடனமாடுவோம். ஆனால் அரைமண்டியில் நடனமாடுவது அவ்வளவு எளிது கிடையாது. உடலின் மேல் பகுதியில்தான் நம்முடைய முழு அசைவும் இருக்கும்.

பரதத்தை பொறுத்தவரை அப்படி இல்லை. தலைமுதல் கால் வரை அசைவுகள் இருக்கும். மேலும் அபிநயம் பிடிக்கும் போது அவர்களின் கை மற்றும் கால் இரண்டுமே நேர்கோடாகத்தான் இருக்கும். மோகினியாட்டத்தில் அப்படி இருக்காது. உடல் முழுதும் வளைந்து, மிகவும்‌ நளினமாக இருக்கும்‌. முக பாவனைகளுக்கு அதிக முக்கியத்துவம் என்பதால் இந்த நடனம் மிகவும் மெதுவாகத் தான் இருக்கும். மோகினியாட்டத்தில் கதகளி மற்றும் பரதம் இரண்டுக்குமான அசைவுகள் இருக்கும்’’ என்றவர் நடனமும் ஒரு புரொபஷனலாக எடுக்கலாம் என்கிறார்.

‘‘எல்லோரும் பொறியியல் படிச்சிட்டு ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்க வேண்டும் என்றுதான் நினைக்கிறாங்க. எந்த துறையாக இருந்தாலும் ஆரம்பத்திலேயே அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளமாக கிடைக்காது. அவர்கள் தங்களின் துறையில் மேம்படத்தான் அவர்களின் சம்பளமும் உயரும். இது எல்லா துறைக்கும் பொருந்தும். நான் சி.ஏ முடிச்சிட்டு வேலை பார்த்தாலும், நடனம்தான் என் துறைன்னு தேர்வு செய்தேன். அதில் என் முழு திறமையினை வெளிப்படுத்தினேன். இப்போது உலகம் முழுதும் என் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நான் இந்த துறையை தேர்வு செய்த போது வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் திட்டினாங்க. நல்ல வேலையை விட்டுவிட்டு நடனமாட போறியான்னு கேட்டாங்க. மேலும் அதில் உன்னால் என்ன சாதிக்க முடியும்னு சொன்னாங்க. ஆனால் என் திறமைக்கும் மரியாதை இருக்குன்னு இப்போது புரிந்துகொண்டார்கள். என்னைப் பொறுத்தவரை எந்த துறையை நீங்க தேர்வு செய்தாலும், அதில் உங்க முழு திறமையினை வெளிப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் கண்டிப்பா அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு நானே ஒரு உதாரணம்.

கடந்த ஆண்டு சென்னையில் திருவையாறு, மாமல்லபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை… இன்னும் பல இடங்களில் நான் நடன நிகழ்ச்சி செய்திருக்கேன். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், பரதநாட்டியம் போல் மோகினியாட்டத்திற்கும் நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் உள்ளது. இந்த நடனம் எப்படி இருக்கும்னு பார்க்கவே வராங்க. நான் தமிழ்நாட்டில் நிகழ்ச்சி செய்யும் ேபாது, பாரதியார் கவிதைகள், ஆண்டாள் கதை என அங்குள்ள மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய கருவைதான் நடனமாக வெளிப்படுத்துகிறேன். எந்த நடனமாக இருந்தாலும் ஒரு கதை இருக்கும்.

அதை அந்தந்த நடனத்தின் அபிநயத்திற்கு ஏற்ப வெளிப்படுத்துவதுதான் ஹைலைட்’’ என்றவர், பரதம்‌ போல மோகினியாட்டத்தினையும் அனைத்து மக்களும் ரசிக்கும்படி கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதில் கவனம்‌ செலுத்தி வருகிறார்‌.

தொகுப்பு: ஷன்மதி

The post திறமைக்கு என்றும் அங்கீகாரம் கிடைக்கும்! appeared first on Dinakaran.

Tags : Saffron Mokiniyatta ,Reka Raju ,Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?