×

தொட்டில் கட்டி சுமந்து செல்லும் அவலம் வழித்தட கேட்டை திறக்க கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

ஊட்டி : கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி கடந்த 2020ம் ஆண்டில் இருந்து மூடப்பட்டுள்ள வழித்தட கேட்டை திறக்கக்கோரி ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ெஜகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட அருவங்காடு, காந்திநகர் ஊர் பொதுமக்கள், மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘‘நீலகிரி மாவட்டம் அருவங்காடு அருகே ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் கிராமத்தில் பல ஆண்டுகளாக சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இதில் பெரும்பாலும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களும் மற்றும் அன்றாட தின கூலி தொழிலாளர்களும் உள்ளனர். எங்கள் பகுதியை சுற்றிலும் மலை பகுதியாகவும் மற்றும் பாறை பகுதியாகவும் உள்ளது. இங்கு அரசு வழங்கிய இடத்தில் வீடுகளை கட்டி 35ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறோம்.

ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம் இப்பகுதி அமைந்துள்ளது. எங்கள் கிராமத்திற்கு செல்ல சுமார் 150 படிகட்டுகளுக்கு மேல் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இங்கிருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கும் மற்றும் பள்ளி செல்வதற்கும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ரேசன் கடைகள், மருத்துவமனைகளுக்கு செல்வதற்கும் மேலும் வயது முதிர்ந்தவர்கள் செல்வோர் என பலரும் சிரமம் அடைந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மேலாளர், எங்கள் பகுதியை பார்வையிட்டு மனிதாபிமான அடிப்படையில் எங்களின் கோரிக்கையை ஏற்று ராமசாமி மலை வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பு அருகில் இருந்து எங்கள் ஊருக்கு செல்ல வழித்தடம் அமைத்து ரோலிங் கேட் அமைத்து கொடுத்தார்.

இதனால் எங்கள் பகுதிக்கு எளிமையாக சென்று வந்தோம். கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சமயத்தில் 2020ம் ஆண்டு ரோலிங் கேட் அமைக்கப்பட்ட வழித்தடம் யாரும் பயன்படுத்தாதவாறு பூட்டி வைக்கப்பட்டது. தொற்று காலம் முடிந்த நிலையில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பின் இந்த வழித்தடத்துடன் மூடப்பட்ட 4 வழித்தடம் திறக்கப்பட்டு அங்கு 4 தனியார் காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எங்கள் காந்திநகர் பகுதியில் உள்ள வழித்தடம் மட்டும் திறக்கப்படவில்லை. இச்செயல் எங்கள் கிராம மக்களிடையே மிகவும் வேதனையும் மற்றும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்காக வழித்தடமின்றி அவதியடைந்து வருகிறோம்.

இந்த வழித்தடம் இல்லாததால் உடல் நிலை சரியில்லாதவர்கள் மற்றும் வயதானவர்களை எங்கள் ஊர் இளைஞர்கள் தொட்டில் கட்டியும் நாற்காலியிலும் சுமந்து செல்லும் அவல நிலை உள்ளது. எனவே காந்திநகர் பகுதி வழிதடத்தையும் திறந்து மக்களின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

The post தொட்டில் கட்டி சுமந்து செல்லும் அவலம் வழித்தட கேட்டை திறக்க கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு appeared first on Dinakaran.

Tags : Avalam ,Ooty ,Jagatala ,Corona epidemic ,
× RELATED விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில்...