×

செம்பனார்கோயில் அருகே அறுவடை வயலில் வாத்துகள் மேய்க்கும் பணி

செம்பனார்கோயில் : செம்பனார்கோயில் அருகே அறுவடை வயலில் வாத்துகள் மேய்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே காளகஸ்திநாதபுரம் மற்றும் சுற்று பகுதிகளை கேரளா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், அறுவடை செய்யப்பட்ட வயல்களிலும், குட்டையிலும் வாத்துகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.

இதுகுறித்து வாத்து மேய்க்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:இந்த தொழிலை நாங்கள் குடும்பத்துடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாத்துகளை மேய்த்து வருகிறோம். தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட வாத்துகள் மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ளன. தற்போது இந்த பகுதியில் சுமார் 10,000 வாத்துகள் உள்ளன. குறிப்பாக வயல்களில் அறுவடை காலங்களிலும், நிலத்தை உழுது சேறும், சகதியுமாக இருக்கும் நிலையிலும் வாத்துகளை மேய்ச்சலுக்கு விடுவோம்.

இதனால் வாத்துகள் வயலில் கிடைக்கும் நத்தை, நண்டு, சிறு பூச்சி, புழு ஆகியவற்றை தின்று இரையாக்கிக் கொள்ளும். இதன் மூலம் வாத்துக்கு இரை கிடைப்பதுடன், மேய்ச்சலுக்கு விடுவதால் வாத்துகளின் கழிவுகளும் வயலுக்கு இயற்கை உரமாக பயன்படும். தற்போது குறுவை அறுவடை முடிந்த வயலில் தண்ணீர் பாய்ச்சு மேய்ச்சலுக்கு விட்டுள்ளோம். வாத்துகளை மேய்ச்சலுக்கு விட வயல் உரிமையாளரிடம் அனுமதி பெற்று, அதற்குரிய பணத்தை கொடுத்து தான் மேய்ச்சலுக்கு விடுவோம்.

பொதுவாக குஞ்சு பொரித்த 4½ மாதங்களில் வாத்துகள் முட்டையிட ஆரம்பிக்கும். அதன்தொடர்ந்து சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர் முட்டையிடுவது குறையும்போது அந்த வாத்துகளை கறிக்கு அனுப்பி விடுவோம். தற்போது இங்கு முட்டையிடும் வாத்துகளும், கறிக்கு அனுப்பப்படும் வாத்துகளும் மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ளன. முட்டைகளை ரூ.5 முதல் ரூ.8 வரை விற்பனை செய்வோம். இந்த வாத்து முட்டைகளை கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். தற்போது இங்கு மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ள கறி வாத்துகள் ஜார்கண்ட் மாநிலத்திற்கு அனுப்பப்பட உள்ளது. இதேபோல் பல்வேறு மாநிலங்களுக்கும் வாத்துகளை அனுப்பி வருகிறோம் என்றனர்.

The post செம்பனார்கோயில் அருகே அறுவடை வயலில் வாத்துகள் மேய்க்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Sembanarkoil ,Mayiladuthurai district ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில்...