×

சேரன்மகாதேவியில் போலீசாரை கண்டித்து லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்

*ஒரே இடத்தில் 100க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தியதால் பரபரப்பு

வீரவநல்லூர் : சேரன்மகாதேவியில் போலீசாரை கண்டித்து லாரி உரிமையாளர்கள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரே இடத்தில் 100க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி தாலுகா பகுதிகளில் இயங்கி வரும் மினி லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் நேற்று சேரன்மகாதேவியில் போலீசாரை கண்டித்து திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சேரன்மகாதேவி சப்.கலெக்டர் பங்களா செல்லும் வழியில் பைபாஸ் சாலையோரம் 100க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த சேரன்மகாதேவி டிஎஸ்பி சுபக்குமார் போராட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் தாலுகா பகுதிகளில் லாரிகளில் அதிகபாரம் ஏற்றி வருவதாக கூறி காவல்துறையினர் அடி‌க்கடி வழக்கு பதிவு செய்து அபராதம் விதிப்பதாகவும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக எழுத்து மூலமாக புகார் அளிக்குமாறு டிஎஸ்பி சுபக்குமார் கேட்டுக்கொண்டதை அடுத்து லாரி உரிமையாளர்கள் டிஎஸ்பி மற்றும் சேரன்மகாதேவி சப்.கலெக்டரிடம் புகார் மனு அளித்து கலைந்து சென்றனர்.

The post சேரன்மகாதேவியில் போலீசாரை கண்டித்து லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Cheranmahadevi ,Dinakaran ,
× RELATED நெல்லையில் ஆட்டோ கவிழ்ந்து மின்வாரிய தற்காலிக ஊழியரான சிறுவன் பலி..!!