×

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா

ஈரோடு : அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோமதி. இவருக்கு குன்னத்தூர் கருங்கல்மேடு பகுதியை சேர்ந்த தங்கமணி என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். அவர் கோமதியிடம் தனது உறவினர்களான காஞ்சிக்கோவில் கே.கே.வலசு பகுதியை சேர்ந்த 2 பேரை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

அந்த நபர்கள், ‘‘எங்களுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் நன்றாக தெரியும். உங்களுக்கு அரசு வேலை வாங்கி தருகிறோம்’’ என கூறியுள்ளனர். அவர்களை கோமதி நம்பினார். இதையடுத்து கிராம உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் பணத்தை கோமதியிடம் அந்த 2 பேரும் வாங்கியுள்ளார். இதேபோல அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவரிடம் போலீஸ் எஸ்ஐ வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம், மோகனாம்பாள் என்பவரிடம் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.75 லட்சம், கணேசன் என்பவரிடம் டாஸ்மாக் டெண்டர் ஒப்பந்தம் வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் என 4 பேரிடம் சேர்த்து ரூ.35.75 லட்சம் வாங்கிக் கொண்டு உறுதியளித்தபடி எதுவும் செய்து கொடுக்கவில்லை.

சுமார் ஓராண்டு காலமாக காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் பணம் கொடுத்த 4 பேரும் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். அதற்கும் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட கோமதி, கணேசன், மோகனாம்பாள், கோபிநாத் ஆகியோர் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனக் கூறி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் பண மோசடி செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

The post அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Govt Job ,Fraud Collector's Office ,Tarna ,
× RELATED திருப்பூரில் பெட்ரோல் பங்கில்...