சென்னை: பிரபல நடிகை வரலட்சுமி விசாரணைக்கு ஆஜராகும்படி தேசிய புலனாய்வு முகமை சம்மன் அனுப்பியுள்ளது. போதைப் பொருள், ஆயுதம் கடத்தியதாக நடிகை வரலட்சுமியின் உதவியாளர் ஆதிலிங்கம் கைது செய்யப்பட்ட வழக்கில் என்.ஐ.ஏ. நடவடிக்கை எடுத்துள்ளது. கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருட்கள், ஆயுதங்கள் கடத்திய வழக்கில் ஆதிலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள், ஆயுத கடத்தல் வழக்கில் ஏற்கனவே இலங்கை தமிழர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 14-வது நபராக ஆதிலிங்கம் கைது செய்யப்பட்டார்.
என்.ஐ.ஏ. நடத்திய விசாரணையில் நடிகை வரலட்சுமியிடம் ஆதிலிங்கம் உதவியாளராக இருந்தது தெரியவந்தது. போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை திரைத்துறையில் ஆதிலிங்கம் முதலீடு செய்திருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய பிரமுகரான குணசேகரன் என்பவருடன் ஆதிலிங்கம் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஆதிலிங்கத்தின் முதலீடு மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களை திரட்டுவதற்காக நடிகை வரலட்சுமியை என்.ஐ.ஏ. விசாரணைக்கு அழைத்துள்ளது.
ஆந்திராவில் படப்பிடிப்பில் இருப்பதால் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக இயலாது என என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் வரலட்சுமி தெரிவித்துள்ளார். விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்குவதற்காக இலங்கையைச் சேர்ந்த கும்பல் போதைப் பொருள், ஆயுத கடத்தலில் ஈடுபட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியுள்ளனர். தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு யாரேனும் சினிமாவில் உள்ளவர்களுக்கு தொடர்பு உள்ளதா?..எவ்வளவு பணத்தை ஆதிலிங்கம் சட்டவிரோதமாக மாற்றியுள்ளார் என்ற கோணத்திலும் விசாரணை விரிவடைந்திருப்பதாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
The post போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் நடிகையின் முன்னாள் உதவியாளருக்கு தொடர்பு: நடிகை வரலட்சுமி விசாரணைக்கு ஆஜராகும்படி என்.ஐ.ஏ. சம்மன்..!! appeared first on Dinakaran.