×

கடையநல்லூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 80 பேர் மீட்பு-நாங்குநேரி, சேர்ந்தமரத்தில் வீடுகள் இடிந்தன

கடையநல்லூர் : நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடையநல்லூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கொட்டித் தீர்த்த மழை காரணமாக இப்பகுதியில் உள்ள கால்வாய்களில் தண்ணீர் கரைபுரண்டோடுகிறது. திரிகூடபுரம்  பெரியநாயகம் கோயில் பகுதி பெரியாற்று படுகையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 3 பெண்கள் உட்பட 20 பேர் சிக்கினர். தகவலறிந்த வருவாய் மற்றும் காவல் துறையினர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கவிதா தலைமையில் நிலைய அலுவலர் ரமேஷ் உட்பட வீரர்கள் விரைந்து சென்று வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர். திரிகூடபுரம் ஒன்றிய கவுன்சிலர் அருணாசலபாண்டியன், திரிகூடபுரம் திமுக கிளை செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் பொதுமக்கள் தீயணைப்பு படை வீரர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். இதேபோல் கல்லாறு, சின்னாறு ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ஆற்றுக்கு குளிக்கவும், விவசாய பணிகளுக்கும் சென்றவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர். தகவலறிந்த தென்காசி எஸ்பி கிருஷ்ணராஜ், ஏடிஎஸ்பி ராஜேந்திரன், கோட்டாட்சியர் ராமச்சந்திரன், கடையநல்லூர் தாசில்தார் ஆதிநாராயணன், துணை தாசில்தார் திருமலைமுருகன், புளியங்குடி டிஎஸ்பி கணேஷ், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் (கடையநல்லூர்) சுந்தர்ராஜ், (வாசுதேவநல்லூர்) ஷேக் அப்துல்லா மற்றும் வீரர்கள், எஸ்டிபிஐ கட்சியின் பேரிடர் மேலாண்மை துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காட்டாற்று ஓடையில் கூடுதல் நீர் வந்ததால் அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பெரியாற்று படுகையிலிருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் காசிதர்மம் கிராமம் வழியாக மாற்றுப்பாதையில் டிராக்டர், ஜீப்புகள் மூலம் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். கருப்பாநதி அணை  நிரம்பியதையடுத்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால்  பாப்பான் கால்வாய் மற்றும் சீவலன் கால்வாயில் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டுள்ளது. நேற்று பாப்பான் கால்வாயில் உள்ள ரஹ்மானியாபுரம் பாலம், அம்பேத்கர் தெரு பாலம்,  மாவடிக்கால் பாலம் ஆகியவற்றை கலெக்டர் கோபாலசுந்தரராஜ் பார்வையிட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் படி அறிவுரை வழங்கினார். தொடர்ந்து  பெரியாறு மற்றும் கல்லாற்று பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை  கலெக்டர் பார்வையிட்டார். நாங்குநேரி வட்டாரத்தில் தொடர் மழை காரணமாக விவசாயிகள், வயல் உழவு மற்றும் வரப்புகள் சீர்செய்தல், நாற்று பாவுதல்  உள்ளிட்ட பணிகளை தொடங்கி உள்ளனர். கால்வாய்களில் ஆங்காங்கே குப்பை அடைத்திருந்ததால் குளங்களுக்கு நீர் வருவதில் தடை ஏற்பட்டது. சிங்கநேரி பகுதியில் ஊராட்சி தலைவர் முத்துசொர்ணம் சண்முகசுந்தரம் தலைமையில் விவசாயிகள், கால்வாய் மற்றும் பாலங்களுக்கு இடையே ஏற்பட்ட அடைப்புகளை சரி செய்து குளங்களுக்கு தண்ணீர் சீராக வரச் செய்தனர். இதனால் சிங்கநேரி மற்றும் மேல புத்தநேரி பகுதிகளை சேர்ந்த 3 குளங்கள் நிரம்பும் நிலையில் உள்ளன.நாங்குநேரி அருகே உள்ள பாப்பாங்குளம்  மேலத்தெருவில் கனமழைக்கு முத்துலட்சுமி (66) என்பவரது வீட்டின் மாடியின்  ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது. சிவகிரி அருகே தேவிபட்டினத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய செங்குளம் மடையில் உடைப்பு ஏற்பட்டது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா பார்வையிட்டார். சங்கரன்கோவில் கோட்டட்சியர் (பொ)ஷேக் அப்துல்காதர், வாசுதேவநல்லூர் ஒன்றிய சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், சிவகிரி தாசில்தார் ஆனந்த், திமுக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் நல்லசிவன், வக்கீல் அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ்,  மாணவரணி சுந்தர வடிவேலு, ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் குமார், வேளாண்மை உதவி இயக்குநர் இளஞ்செழியன், வேளாண்மை அலுவலர் சிவமுருகன், வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார், கிராம அலுவலர் பாக்கியராஜ், ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கிளை செயலாளர் முருகன், ஒன்றிய விவசாய அணி கனகராஜ், முகமுது மீரான், முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர். கடையநல்லூர் தாலுகாவிற்குட்பட்ட சேர்ந்தமரம் மஜரா 1வது வார்டுக்குட்பட்ட பாக்கியநாதன் – சரோஜா தம்பதியினரின் ஓட்டுவீடு, கனமழைக்கு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. சேர்ந்தமரம் பழைய போலீஸ் நிலையம் எதிரே செல்லும் சாலையில் உள்ள பெரியமுக்கு தெருவில் வாய்க்கால்கள் திட்டமிட்டு கட்டப்படாததால் வீட்டிற்குள் மழைநீர் புகுந்தது. கிராம நிர்வாக அலுவலகம் செல்லும் வழியில் தண்ணீர் தேங்கி நோய் பரப்பும் சூழல் உள்ளது. சாக்கடை கால்வாயில் உள்ள அடைப்புகளை சரிசெய்து கழிவுநீர் தேங்காத அளவிற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேர்ந்தமரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முக்கூடல் அடுத்த சிவகாமிபுரம் ராஜிவ்காந்தி நகர் அருகே ஓடையில் நேற்று முன்தினம்  இரவு உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளை  வெள்ள நீர் சூழ்ந்தது. உடனடியாக  வருவாய், காவல்துறையினர் மற்றும் பஞ்சாயத்து தலைவர் ஆனைக்குட்டி பாண்டியன்  ஆகியோர் மக்களை வெளியேற்றி முக்கூடலில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். சேரன்மாதேவி கோட்டாட்சியர் சிந்து,  தாசில்தார் பாலசுப்பிரமணியன், பாப்பாக்குடி ஒன்றிய துணை சேர்மன் மாரி  வண்ணமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, வருவாய் ஆய்வாளர் சுசீலா, கிராம  நிர்வாக அலுவலர்கள் ராமகிருஷ்ணன், முருகன் மற்றும் பொதுப்பணித்துறை  மைக்கேல் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். …

The post கடையநல்லூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 80 பேர் மீட்பு-நாங்குநேரி, சேர்ந்தமரத்தில் வீடுகள் இடிந்தன appeared first on Dinakaran.

Tags : Kadayanallur ,Nanguneri ,Chettamaram ,Gadayanallur ,Nellai, South Kasi district ,Gadyanallur ,Kadyanallur ,Chettamaran ,Dinakaran ,
× RELATED +2 தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி...