×

அடைக்கலம் கொடுத்து திருமணம் செய்து வைத்த முதிய தம்பதியினரின் வீட்டை அபகரித்த ஆசாமி கலெக்டரிடம் கண்ணீர் மல்க புகார் மனைவியுடன் சேர்ந்துகொண்டு

வேலூர், ஆக.29: சிறுவயதில் ஆதரவற்று வந்தவருக்கு அடைக்கலம் கொடுத்த தங்களின் வீட்டை அபகரித்தவரிடம் இருந்து அதை மீட்டுத்தர வேண்டும் என்று கண்ணீர் மல்க வயது முதிர்ந்த தம்பதி, நேற்று காலை நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நடக்க முடியாத நிலையில் தள்ளாடியபடி மனைவியுடன் வந்த பாலமதியை சேர்ந்த சுப்பிரமணி(76) என்பவர், அளித்த மனுவில், ‘நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன் ஆதரவற்று வந்த பழனி என்பவரை மகன் போல் வளர்த்து, அவருக்கு திருமணம் செய்து வைத்தோம். ஆனால் அவர் திருமணம் ஆனவுடன் மனைவியுடன் சேர்ந்து, எனது வீட்டு பத்திரத்தை போலியாக தயாரித்து தனது பெயரில் எழுதிக்கொண்டு எங்களை வீட்டை விட்டு துரத்திவிட்டார். வயதான காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நாங்கள் இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் அளித்தோம். மேலும் ஆர்டிஓ, டிஆர்ஓவிடம் மனு அளித்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்கள் சொத்தை மீட்டுத்தர வேண்டும்’ என தெரிவித்தனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஏரிப்புதூர் கிராமத்தை சேர்ந்த நரிக்குறவர்கள் 20 பேர் அளித்த மனுவில், நாங்கள் ஏரிப்புதூர் பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக வீடு இன்றி அவதிப்பட்டு வருகிறோம். எனவே எங்களுக்கு வீட்டுமனை வழங்கவேண்டும் என மனு அளித்தனர்.

அப்போது கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை கலெக்டர் மற்றும் அங்கிருந்த பெண் போலீசார் மீட்டு விசாரித்தனர். அவர் கே.வி.குப்பம் அடுத்த வடுகந்தாங்கல் அருகே கீழ்முட்டுக்கூர் கிராமத்தை சேர்ந்த குமரன் மனைவி ரமீலா(35) என தெரிய வந்தது. உடனே அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கலெக்டர் அனுப்பி வைத்தார். மேலும் அவர் வைத்திருந்த மனுவையும் கலெக்டர் பெற்றுக் கொண்டார். அதில் நிதிநிறுவனம் மூலம் வாங்கிய இருசக்கர வாகனத்தை, கணவர் இறந்தவுடன், தவணை கட்டத்தேவையில்லை. இன்சூரன்ஸ் மூலம் சரியாகிவிட்டது என்று கூறிய அவர்கள் பின்னர் தவணை செலுத்தவில்லை என்று கூறி பறித்து சென்று விட்டதாக தெரிவித்து இருந்தார். அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘கெங்கநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிறிய கானாற்றின் மீது கட்டப்பட்ட சிறுபாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இருபுறமும் தண்ணீர் தேங்குவதால் இடுப்பளவு நீரில் இறங்கி செல்ல வேண்டியுள்ளது. எனவே, கானாற்றை தூர்வார வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தனர்.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், உதவியாளர்கள், நிர்வாக பணியாளர்கள் ஆகியோர் அளித்த மனுவில், ‘தங்களுக்கான 20 மாத மதிப்பூதியம் வழங்கப்படாமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளதாகவும், அதை பெற்றுத்தர வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர். தொடர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் குறைவான பொதுமக்களே மனு அளிக்க வந்தனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
கேப்சன்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தவர்களிடம் விசாரணை நடத்தும் கலெக்டர் குமாரவேல்பாண்டியன்.
அடைக்கலம் கொடுத்த தங்களின் வீட்டை அபகரித்தவரிடம் இருந்து அதை மீட்டு தரும்படி கண்ணீர் மல்க மனு அளித்த வயது முதிர்ந்த தம்பதியினர்.

The post அடைக்கலம் கொடுத்து திருமணம் செய்து வைத்த முதிய தம்பதியினரின் வீட்டை அபகரித்த ஆசாமி கலெக்டரிடம் கண்ணீர் மல்க புகார் மனைவியுடன் சேர்ந்துகொண்டு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Asami ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...