×

கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் சுகாதார வளாகம் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி

 

கரூர், ஆக. 29: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லைட்ஹவுஸ் கார்னர் அருகே சுகாதார வளாகம் இல்லாததால் இங்கு வந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லைட்ஹவுஸ் கார்னர் பகுதி முக்கிய சந்திப்பு பகுதியாக உள்ளது. கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருச்சி போன்ற பிற மாவட்ட பகுதிகளில் இருந்தும் கரூர் வரும் அனைத்து பேருந்துகளும் அமராவதி ஆற்றின் மேம்பாலத்தின் வழியாக லைட்ஹவுஸ் கார்னர் பகுதிக்கு வந்து பேருந்து நிலையம் செல்கிறது.

இந்த பகுதியை சுற்றிலும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து கரூர் நகரம் வரும் மக்கள் ஜவஹர் பஜார், மக்கள் பாதை, கரூர் மாரியம்மன் கோயில், மார்க்கெட், ரயில்வே நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினரும் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இறங்கி இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் செல்கின்றனர். ஆனால், முக்கிய சந்திப்பு பகுதியாக உள்ள லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் சுகாதார வளாக வசதி இல்லாத காரணத்தினால், இந்த பகுதியினரும், கரூர் வரும் மக்களும் தினமும் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இயற்கை உபாதை பிரச்னைகளுக்கு நீண்ட தூரம் நடந்து செல்லும் நிலைதான் இந்த பகுதியில் உள்ளது. எனவே, லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, மக்கள் கோரிக்கையின்படி மாநகராட்சி நிர்வாகம் இந்த பிரச்னை குறித்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பாப்பாக உள்ளது.

The post கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் சுகாதார வளாகம் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Karur ,Lighthouse Corner ,Karur Corporation ,Karur Lighthouse Corner ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...