×

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிகாலம் விவசாயிகளுக்கான பொற்காலம் எம்எல்ஏ மாங்குடி பேச்சு

காரைக்குடி, ஆக.29: காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியம் செங்காத்தான்குடியில் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் சார்பில் தரிசுநிலங்களை மேம்படுத்தி மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்க விழா நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகஜெயந்தி வரவேற்றார். எம்எல்ஏ மாங்குடி திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் மேம்பாட்டிற்கு என பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தை முதல்வர் அறிவித்து அதில் 100 சதவீத மானியத்தில் திட்டங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளை கிளஸ்டர் முறையில் ஒருங்கிணைத்து அவர்களிடம் தரிசாக உள்ள நிலங்களை மேம்படுத்தி அதில் 100 சதவீத மானியத்தில் போர், சொட்டுநீர் பாசனம் மற்றும் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. தவிர அந்த நிலங்களுக்கு தகுந்தார்போல் மா மரக்கன்றுகள், தென்னை மரக்கன்றுகள் மற்றும் நாவல் மரக்கன்றுகள் உள்பட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த வட்டாரத்தில் 203 விவசாயிகளை ஒருங்கிணைத்து 153 ஏக்கரில் இந்த திட்டம் வேளாண் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அளவில் முதல் இடத்தை நம் வட்டாரம் பெற்றுள்ளது பாராட்டக்கூடியது. இதுதவிர ஊடுபயிராக கோழ்வரகு, உளுந்து போன்ற விதைகள் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு வேளாண்மையில் சிறந்த விளங்க வேண்டும் என்பதற்காக முதல்வர் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து உடனடியாக செயல்படுத்தி வருகிறார். முதல்வரின் ஆட்சி காலம் விவசாயிகளின் பொற்காலமாக உள்ளது என்றார். நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் மங்கையர்கரசி, தோட்டக்கலை அலுவலர் சிந்தியா, காங்கிரஸ் வட்டார தலைவர் செல்வம், ஊராட்சிமன்ற தலைவர் அய்யநாதன், காங்கிரஸ் நிர்வாகி மாஸ்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிகாலம் விவசாயிகளுக்கான பொற்காலம் எம்எல்ஏ மாங்குடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,MLA Mangudi ,Karaikudi ,Department of Agriculture and Farmers Welfare ,Chakkottai Union ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...