×

டி.கல்லுப்பட்டி அருகே மாடியில் தூங்கிய தொழிலாளி உருண்டு கீழே விழுந்து பலி

பேரையூர்: பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி – எம்.சுப்புலாபுரம் இடையே ராஜபாளையம் மெயின் சாலை அருகே பழைய கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர். இடிக்கப்பட்ட கட்டிட தடுப்பு இல்லாத மொட்டை மாடியில், நேற்று முன்தினம் இரவு தொழிலாளர்கள் சிலர் தூங்கியுள்ளனர். அதில் உத்திரபிரதேசம் பஸ்தி மாவட்டம், போலோ புஸ்லாக் நகரைச் சேர்ந்த அயோத்தியா மகன் ராம்நாத் (45) என்பவரும் தூங்கியுள்ளார்.

நேற்று அதிகாலையில் உறக்கத்தில் இருந்த அவர் 16 அடி உயரத்திலிருந்து உருண்டு கீழே விழுந்துள்ளார். விழுந்தவர் மீண்டும் எழுந்து உட்கார்ந்துள்ளார். இவர் விழுந்த சத்தம் கேட்டு விழித்த பிற தொழிலாளர்கள் அவருக்கு முதலுதவி செய்து சாப்பிட டீ கொடுத்துள்ளனர். இதன்பிறகு சிறிது நேரத்தில் அவர் மயக்கம் வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ராம்நாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் விருதுநகர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post டி.கல்லுப்பட்டி அருகே மாடியில் தூங்கிய தொழிலாளி உருண்டு கீழே விழுந்து பலி appeared first on Dinakaran.

Tags : TD ,Gallupatti ,BERAYUR ,BERAYUR TALUKA ,T. Kallupatti ,Rajapalayam ,Supulapuram ,Kallupatti ,Dinakaran ,
× RELATED டி.கல்லுப்பட்டி அரசு பள்ளியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம்