×

வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணிடம் ஆன்லைனில் பணம் பறிப்பு: போலீசார் விசாரணை

 

புழல்: வேலை வாங்கி தருவதாக கூறி, இளம் பெண்ணிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர் ஜெயசரண்யா(32). இவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு சமீபத்தில் பகுதி நேர வேலை வேண்டுமா என, குறுஞ்செய்தி வந்தது. இதையடுத்து, அவர் வேண்டும் என பதிலளித்துள்ளார். இந்நிலையில், அவரது வாட்ஸ்-அப்பிற்கு டெலிகிராம் செயலியின் குழு இணைப்பு அனுப்பப்பட்டு, அதில் இணையுமாறு கூறப்பட்டது. இதையடுத்து, அவர் இணைப்பை அழுத்தி அதில், தன்னை இணைத்து கொண்டார்.

குழுவில் இணைந்த பிறகு மேலும் ஒரு இணைப்பை பின்பற்றுமாறு வந்த தகவலை தொடர்ந்து அந்த இணைப்பில் சென்றார். அப்போது மூன்று டாஸ்குகள் நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.1,000 செலுத்தினால், ரூ.1,300 திரும்ப கிடைக்கும் எனவும், ரூ.5,000 மற்றும் ரூ.5,800 அனுப்பினால் ரூ.14,330 கிடைக்கும் என கூறியதால், அந்த பணத்தை ஜெயசரண்யா செலுத்தினார். பின்னர் அவரது கணக்கிற்கு மீண்டும் பணம் திரும்ப வந்துள்ளது. தொடர்ந்து ரூ.42,805 அனுப்பினால் ரூ.57,000 திரும்ப கிடைக்கும் என தெரிவித்ததன் பேரில், ஜெயசரண்யா தனது வங்கி கணக்கில் இருந்து, ரூ.42,805 அனுப்பியுள்ளார்.

ஆனால், பணத்தை திருப்பி அனுப்பாமல் மேலும் ரூ.92,000 பணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயசரண்யா போலியான நிறுவனத்தால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, 1930 மூலமாகவும், புழல் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். புகாரின் பேரில் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி மற்றும் இணைய வழி குற்றம் என்பதால் குற்றப்பிரிவு மற்றும் சைபர் பிரிவு என அனைத்து பிரிவு போலீசாரும் மோசடி தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணிடம் ஆன்லைனில் பணம் பறிப்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Pujal ,
× RELATED புழலில் பயன்பாடில்லாத வருவாய்த்துறை...