×

உத்திரமேரூர் அருகே வெவ்வேறு விபத்தில் 2 வாலிபர்கள் பலி

உத்திரமேரூர்: திண்டுக்கல் விஐபி நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (24). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் உத்திரமேரூர் அருகே அ.பி.சத்திரம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீராம் தனது பெரியம்மா மகன் ஹேமகுமார் என்பவருடன் சேர்ந்து வீட்டிற்கு அருகில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். இதில் ஸ்ரீராம்க்கு நீச்சல் அரைகுறையாகத்தான் தெரியும் என கூறப்படுகிறது. இருவரும் குளித்துக் கொண்டிருக்கும்போது ஹேமகுமாருக்கு போன் வந்ததையடுத்து அவர் கிணற்றிலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெகுநேரம் ஆகியும் ஸ்ரீராம் கிணற்றிலிருந்து வெளியே வரவில்லை என ஹேமகுமார் அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியோடு கிணற்றிலிருந்து ஸ்ரீராமை சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்ரீராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் உத்திரமேரூர் அருகே ராவத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து (29). திருமணமாகாதவர். இவர் நேற்று அதிகாலை வயலுக்கு எலி வேட்டைக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரணைமண்டபம் அருகே வந்தபோது முத்து நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த பெருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துவின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உத்திரமேரூர் அருகே வெவ்வேறு விபத்தில் 2 வாலிபர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Uttramerur ,Sriram ,Dintugul ,Chennai ,Dinakaran ,
× RELATED அடகு கடையில் நகை கொள்ளை