×

காலியாக உள்ள 621 எஸ்ஐ பணியிடங்களுக்கு எழுத்து தேர்வுக்கான முடிவு ஒரு மாதத்தில் வெளியீடு: சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தகவல்

சென்னை: காலியாக உள்ள 621 எஸ்ஐ பணியிடங்களுக்கு நடந்த எழுத்து தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என்று சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் நிலைய அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கான ஒருங்கிணைந்த தேர்வு கடந்த மே 5ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் உதவி ஆய்வாளர் தாலுகா, ஆயுதப்படை, சிறப்பு காவல் படை ஆகிய பணிகளுக்கு 621 மற்றும் நிலைய அதிகாரிகள் 129 என மொத்தம் 750 காலி பணியிடங்களுக்கு அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த பணியிடங்களுக்கு 1,45,804 ஆண்கள், 40,885 பெண்கள் மற்றும் திருநங்கைகள் 33 என மொத்தம் 1,86,722 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி கடந்த 26ம் தேதி பொது விண்ணப்பதாரர்களுக்கான முதன்மை எழுத்து தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதி தேர்வு 33 மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் நடந்தது. 27ம் தேதி தீயணைப்புதுறைக்கான தேர்வு 12 மையங்களில் நடந்தது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பித்த நபர்களில் 80 சதவீதம் பேர் தேர்வு எழுதினர். 20 சதவீதம் பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. எழுத்து தேர்வுக்கான முடிவு ஒரு மாத காலத்திற்குள் வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post காலியாக உள்ள 621 எஸ்ஐ பணியிடங்களுக்கு எழுத்து தேர்வுக்கான முடிவு ஒரு மாதத்தில் வெளியீடு: சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Board ,Chennai ,Uniform Staff Examination Board ,Dinakaran ,
× RELATED குடியிருப்பு பகுதிகள் மற்றும்...