×

திடக்கழிவு மேலாண்மையை சிறந்த முறையில் செயல்படுத்தி பெருங்குடி, கொடுங்கையூர் கிடங்குகளில் குப்பை கொட்டுவது 2030க்குள் தடுக்கப்படும்: மாநகராட்சி ஆணையர் உறுதி

சென்னை: சென்னையில் சிறந்த முறையில் குப்பை, கழிவுகளை கையாண்டு மறுசுழற்சி செய்ய உள்ளதால், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் கிடங்குகளில் குப்பை கொட்டுவது 2030ம் ஆண்டுக்குள் தடுக்கப்படும், என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கவும், திடக்கழிவு மேலாண்மையை முறையாக செயல்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தீவிர தூய்மைப்பணி திட்டத்தில், சாலைகள், தெருக்கள், பொது இடங்கள், நீர்நிலை கரைகளில் நீண்ட காலமாக குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பை, கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னையில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடியிருப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் உற்பத்தியாகும் குப்பை கழிவுகளின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் கொட்டப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த கிடங்குகளில் கொட்டப்பட்டு, மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பெருங்குடி குப்பை கிடங்கில், பயோமைனிங் முறையில் குப்பை கழிவுகளை தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பயோ மைனிங் முறையில் கொடுங்கயூர் கிடங்கிலும் விரைவில் குப்பை தரம் பிரிக்கப்பட உள்ளது. இந்நிலையில், வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்த 2 பெரிய குப்பை கிடங்குகளில், குப்பை கொட்டுவதை நிறுத்த தேவையான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. குப்பை, கழிவுகளை முறையாக தரம் பிரித்து பொதுமக்கள் வழங்காததால், அதை மொத்தமாக குவித்து, பிறகு தரம் பிரிப்பது சவாலாக உள்ளது. எனவே, வீடுகளில் இருந்து குப்பையை முறையாக தரம் பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குப்பையை கையாள்வதில் புதுமையான நடவடிக்கைகளை புகுத்துவதலும் இதைச் செய்ய உள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘கடந்த 2001ம் ஆண்டு சென்னையில் ஒரு நாளைக்கு 2,500 டன் குப்ைப, கழிவுகளை கையாள வேண்டி இருந்தது. இப்போது தினசரி சென்னையில் குப்பை, கழிவுகளின் அளவு 6,150 டன்களாக அதிகரித்துள்ளது. ஆனால், மாநகராட்சியால் இப்போது தினசரி 1,800 டன் குப்பை, கழிவுகளை மட்டுமே கையாள முடிகிறது. நகரில் உற்பத்தியாகும் குப்பை, கழிவுகளை குப்பை கிடுங்குகளில் கொட்டுவதால் மட்டும் பிரச்னைகள் தீர்ந்துவிடாது. எவ்வளவு பெரிய குப்பை கிடங்காக இருந்தாலும் அதுவும் ஒரு கட்டத்தில் நிரம்பவே செய்யும். எனவே, குப்பை, கழிவுகளை தரம் பிரிக்க உரிய நடவடிக்கையை தீவிரப்படுத்த உள்ளோம். இதற்கான நடவடிக்கையைச் சென்னை மாநகராட்சி இப்போது எடுத்து வருகிறது.

வரும் 2030ல் சென்னையில் குப்பை, கழிவுகளை தரம் பிரிக்கும் நமது திறன் என்பது இங்கே உற்பத்தியாகும் கழிவுக்கு இணையாக இருக்கும். அப்போது நகரில் உற்பத்தியாகும் 90% குப்பை, கழிவுகள் முறையாக கைளாப்படும். வெறும் 10%க்கும் குறைவான குப்பை, கழிவுகள் மட்டும் குப்பை கிடங்கிற்கு செல்லும்,’’ என்றார்.

The post திடக்கழிவு மேலாண்மையை சிறந்த முறையில் செயல்படுத்தி பெருங்குடி, கொடுங்கையூர் கிடங்குகளில் குப்பை கொட்டுவது 2030க்குள் தடுக்கப்படும்: மாநகராட்சி ஆணையர் உறுதி appeared first on Dinakaran.

Tags : Perungudi ,Kodungayur ,Corporation's Commission ,Chennai ,Colungudi ,Corungayur ,Colangudi ,Corporate Commission ,Dinakaran ,
× RELATED அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர்...