×

இந்தியா என்ற பெயரை கேட்டாலே ஒன்றிய பாஜ அரசு அலறுகிறது உண்மையான இந்தியா நம் பக்கம் தான் இருக்கிறது: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: தன்னிகரற்ற கலைஞர் தன் தோளிலும் நெஞ்சிலும் அரைநூற்றாண்டு காலம் சுமந்த திமுகவை நான் சுமக்க தொடங்கி இன்றுடன் ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன. நம் உயிர்நிகர் கலைஞரை 2018ம் ஆண்டு இயற்கை நம்மிடமிருந்து பிரித்தபோது, இயக்கத்தைக் காக்கும் பெரும் பொறுப்பை உங்கள் அனைவரின் ஆதரவுடன் பேராசிரியர் என் மீது சுமத்தினார். அப்போது, திமுக எதிர்க்கட்சியாக இருந்தது. நாடாளுமன்ற மக்களவையில் நமக்கு ஒரு இடம் கூட இல்லை. தலைவரை இழந்த கழகத்தில் பிளவு வராதா என்று எதிர்பார்த்த எதிரிகள் உண்டு. வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக கற்பனை குதிரையில் பயணம் செய்ய நினைத்தவர்கள் உண்டு.

நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டில் பெற்ற மகத்தான வெற்றி என்பது இந்திய அளவிலான அரசியல் இயக்கங்களுக்கு ஒரு பார்முலாவாக ஆனது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கொள்கைக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் மக்களுக்கான திட்டங்கள் தான், சாதனைகள் தான். தங்கள் கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைவிடப் பெருமளவு குறைவாகவே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள் ஒன்றிய பாஜ ஆட்சியினர். ஒன்றிய ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டால் தான், நமது மாநிலத்திற்குரிய நிதி ஒதுக்கீடு முறையாக கிடைக்கும். இந்தியா முழுவதுமே மதவாத இருட்டை விரட்டும் விடியல் தேவைப்படுகின்ற காலம் இது. அதற்காகத்தான் திமுக உள்ளிட்ட 26 கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயரைக் கேட்டாலே ஒன்றிய பாஜக அரசு அலறக் கூடிய நிலை உருவாகியிருக்கிறது. உண்மையான இந்தியா நம் பக்கம் தான் இருக்கிறது. அந்த இந்தியா தான் இந்தியாவுக்கு விடியலைத் தரக்கூடிய வலிமை கொண்டதாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திகழும்.

இந்தியாவின் வெற்றி முழுமையடைய வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் நாம் முழுமையான வெற்றியை பெற்றாக வேண்டும். திமுக எனும் பேரியக்கம், நமது மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாடு முழுவதற்குமான விடியலைத் தர வேண்டிய பொறுப்பில் பங்கேற்றிருக்கிறது. உங்கள் ஆதரவுடன் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற, உங்களில் ஒருவனான நான் ஆயத்தமாக இருக்கிறேன். காண்கின்ற களம் அனைத்திலும் வெற்றியைக் குவிப்போம்.

The post இந்தியா என்ற பெயரை கேட்டாலே ஒன்றிய பாஜ அரசு அலறுகிறது உண்மையான இந்தியா நம் பக்கம் தான் இருக்கிறது: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : India ,Union BJP government ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,DMK ,President ,Union BJP ,
× RELATED ஒன்றிய பாஜக அரசு அமலாக்கத்துறையை...