×

தேனிக்காரர் அணிக்குள் மோதல் தொடங்கியிருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘தேனிக்காரர் அணியில் தொண்டர்கள் சோகத்துடன் இருப்பதற்கான காரணம் என்னவாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் இனி சேர முடியாது என்ற நிலைமையில் தேனிக்காரர் தனித்து முடிவெடுத்து செயல்பட்டு வருகிறார். அதற்காக மூத்த தலைவர்கள் மற்றும் அவரது நம்பிக்கைக்கு உரியவர்களிடம் புது கட்சி அல்லது நீதிமன்றம் மூலம் என்ன செய்யலாம் என்று தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். எப்படியும் லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக முடிவெடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அவரது ஆதரவாளர்களான தொண்டர்கள், மாவட்ட நிர்வாகிகள் இன்னும் தேனிக்காரர் அணியில் இருந்து வர்றோம் என்று மன்னர் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் சொல்லிட்டு இருக்காங்க. ஆனால், மன்னர் மாவட்டத்துல தேனிக்காரர் அணியில் யார் பெரியவங்க என்ற கோஷம் உச்சத்தை எட்டி உள்ளதாம். மன்னர் மாவட்டத்தில் தேனிக்காரர் அணியில் வடக்கு மாவட்ட செயலாளராக மாஜி நகர்மன்ற தலைவரும், தெற்கு மாவட்டத்தில் குக்கரின் மாஜி ஆதரவாளரான மாஜி எம்எல்ஏவும் நியமனம் இருக்காங்க. இலை கட்சியில் இவர்கள் தேனிக்காரர் அணிக்கு தாவும்போது இவர்களுடன் முக்கிய நிர்வாகிகள் யாரும் அணி தாவி செல்லவில்லையாம். இதனால் அதிர்ச்சிக்குள்ளான மாவட்ட செயலாளர்கள் கட்சியில் உள்ள தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை அழைத்து நீ தான் ஒன்றிய செயலாளர், வட்ட செயலாளர், நகர செயலாளர் என நியமித்துள்ளனர். இதில் பொறுப்பு பெற்றுக்கொண்டாலும் அந்த நிர்வாகிகள் அவர்கள் விருப்பம் இல்லாமல் இருக்காங்களாம். இதில் ஒரு சிலர், மாஜி நகர்மன்ற தலைவர் பேச்சை கேட்டு நடப்பதால் மாஜி எம்எல்ஏ உச்சக்கட்ட டென்ஷனில் இருந்து வருகிறார். இதனால் 2 மாவட்ட செயலாளர்களுக்குள் வெளிப்படையாகவே மோதல் இருந்து வருதாம். இதை பார்த்த தேனிக்காரரின் உண்மையான தொண்டர்கள், இலை கட்சியே நம் கையைவிட்டு போயிடுச்சு. இதற்கு முக்கிய காரணமே கோஷ்டிபூசல்தான். இப்போது தேனிக்காரர் புது கட்சி ஆரம்பிக்க போகிறாரா அல்லது நீதிமன்றம் போய் கட்சியை மீட்க போகிறாரா என்றே ெதரியாத நிலையில், இவர்கள் ஏன் சண்டை போட்டு கொள்கிறார்கள் என்று மனம் வெதும்பி போய் இருக்கிறார்களாம். சில தினங்களுக்கு முன் சேலம்காரருக்கு ஆதரவாக வந்த தீர்ப்பால் இனி நம்வாழ்க்கை அவ்வளவுதான். தேனிக்காரருக்கே அரசியல் எதிர்காலம் இல்லாமல் போச்சு. நமக்கு என்ன இனி கிடைக்கபோகுது. சேலம்காரர் தரப்பில் இருந்து அழைத்தபோதே கட்சி தாவி இருக்கணும். அதை கோட்டைவிட்டுவிட்ேடாம். இப்போது அதைப் பற்றி புலம்பி என்ன செய்ய என்று மன வருத்ததில் இருக்காங்க…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாங்கனி மாவட்டத்துல லேடி அதிகாரிக்கு ஷாக் கொடுத்த நாலு காக்கிகள் குறித்து சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாநகரில் மத்திய குற்றப்பிரிவு செயல்பட்டு வருது. இங்கு மோசடி வழக்குகளின் எண்ணிக்கை விலைவாசி போல கிடுகிடுவென உயர்ந்து போச்சாம். இப்பிரிவுக்கு வரும் போலீசார், உயரதிகாரிகளை கவனிச்சிட்டு வேறு பிரிவுக்கு போயிடுறாங்களாம். காக்கிகள் பற்றாக்குறையால் வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் அங்குள்ள அதிகாரிகள் தினமும் திணறி வர்றாங்களாம். இதையடுத்து லேடீசை குறி வைத்து மோசடி செய்யும் கும்பலை உடனடியாக பிடிச்சி உள்ளே போடுவதுடன், தொடர்ந்து மோசடி செய்யாமல் தடுக்க திட்டம் போட்ட அங்குள்ள லேடி அதிகாரி, பட்டியலை எடுத்திருக்காங்க. ஆனா இவர்கள் வலைவிரிக்கும் பாதையெல்லாம் கடைசி நேரத்தில் தெரிந்து கொண்ட மோசடி கும்பலின் தலைவி, போலீசாருக்கு அல்வா கொடுத்துட்டு எஸ்கேப் ஆகியிடுறாராம். இதெப்படி நம்ம பிளான் வெளியே போகுதுன்னு ஆய்வு செஞ்சி பார்த்தா, மத்திய குற்றப்பிரிவில் இருக்கும் நாலு பேரு செஞ்ச வேலையாம். எந்தபக்கம் வலை இருக்குன்னு முன்னமே மோசடி கும்பலுக்கு தெரிவிப்பதை வாடிக்கையா கொண்டிருந்ததும் இதற்காக சிறு தொகையை பரிசா பெற்றதும் தெரியவந்திச்சாம். இதனால ரொம்பவே ஷாக்கான அந்த லேடி அதிகாரி, உங்களை வச்சி யாரையும் பிடிக்க முடியாதுன்னு நேரடியாகவே சொல்லிட்டு, வெளி ஸ்டேசனில் உள்ள தனிப்படையை வச்சி மோசடி கும்பலை தேடி வருதாம். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செஞ்சவங்கள் குறித்து உயரதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கணவர் பெயரை தன் வலைதளத்தில் இருந்து நீக்கிய அமைச்சரு யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ காரைக்கால் மாவட்டத்தில் இருந்து இரண்டாம் முறையாக தேர்வு செய்யப்பட்ட பெண்ணுக்கு, சீனியர்களை பின்னுக்கு தள்ளி அமைச்சர் பதவியும் கிடைத்தது. பொறுப்பேற்றவுடன் அமைச்சரின் பல நடவடிக்கைகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அம்மன் போன்று வேடமிட்டு கொள்வது, சாரட் வண்டியில் செல்வது, ஜான்சிராணி போன்று வாள் வீசுவது, அரசு பேருந்தில் ஏறி மக்களோடு பயணிப்பது என அலைப்பறை கொடுத்தாராம்.
ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஆண் இருப்பது போல அவரது கணவரும் இருந்தார். இதனாலே அமைச்சரின் அனைத்து பேனர்களிலும் முருகர் பெயரை கொண்ட கணவர் புகைப்படமும் தவறாமல் இடம்பெறும். அந்தளவுக்கு ஒரு தொண்டரை போலவே களப்பணியாற்றினார். இதற்காக துறைமுகத்தில் வேலையையும் துறந்தாராம். இப்போது அதிகாரத்தில் உள்ள மனைவிக்கும், கணவருக்கும் பிரச்னையாம். குறிப்பாக ஒரு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் வேண்டுமானால் பெண்களை காப்பாற்ற வேண்டுமானால் மனிதன், கடவுள் அவதாரம் எடுக்கலாம். ஆனால் தற்போது சில ஆண்கள் அசுரர்களாக மாறி பெண்களை கொடுமை செய்கிறார்கள் என்று தன் கணவரை பற்றிய ஆதங்கத்தை கொட்டினராம். மேலும், புல்லட்சாமி பிறந்தநாளுக்கு அமைச்சர் வைத்த ஒரு பேனரில் கூட, களப்பணியாற்றிய கணவரை காணவில்லையாம். அதோடு தன்னுடைய சமூக வலைதள கணக்கான பேஸ்புக், டிவிட்டரிலும் கணவர் பெயரையும், புகைப்படத்தையும் காணவில்லையாம்… அமைச்சரின் ஆதரவாளர்கள் கணவரை புறக்கணிக்கும் நிலைக்கு அமைச்சர் தள்ளப்பட்டது என்ற கேள்வியுடன், காரைக்காலில் சுற்றி வருகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ எதை கட்டுப்படுத்த முடியாமல், எந்த மாவட்ட காவல் துறை திணறுதாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ வெயிலூர்ல மலையடிவார பகுதிகள், பிரபலமான விநாயகர் கோயில் இருக்கிற ‘பாக்கம்’னு முடியுற பகுதி, கசப்பான பகுதினு பரவலா கஞ்சா நடமாட்டம் இருக்காம். கஞ்சா ஆசாமிகளுக்கு அந்தந்த காவல் நிலையங்கள்ல இருக்கும் குறிப்பிட்ட சிலர் காக்கிகளே இன்பார்மர்களா இருக்கிறார்களாம். அதனாலதான் கஞ்சா வியாபாரிங்கள பிடிக்க முடியாம போலீஸ் திணறுதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post தேனிக்காரர் அணிக்குள் மோதல் தொடங்கியிருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Thenigarkar ,Uncle ,Peter ,Thenikar ,wiki ,Yananda ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து...