×

திருவேற்காட்டில் கூவம் நதிக்கரை குடியிருப்புகளை ஜெயக்குமார் எம்பி நேரில் ஆய்வு

பூந்தமல்லி: திருவேற்காட்டில், கூவம் அருகே உள்ள குடியிருப்புகளை ஜெயக்குமார் எம்பி ஆய்வு செய்தார். திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குறிப்பாக கூவம் நதிக்கரையை ஒட்டி மேடான பகுதியில் அமைந்துள்ள இந்த குடியிருப்புகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும், நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த குடியிருப்புகள் இருப்பதாக கூறி அகற்றுவதற்காக வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருவள்ளுவர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் அதிகாரிகளுடன் இந்த குடியிருப்பு பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் ஜெயக்குமார் எம்பியிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘கூவம் நதிக்கரையை ஒட்டியுள்ள இந்த பகுதி மேடான இடத்தில் உள்ளது. இதற்குமுன் பல தடவை மழை வெள்ளத்தின் போதும் சிறிதுகூட இந்த பகுதி பாதிக்கப்படவில்லை. திருவேற்காட்டின் பூர்வ குடிகளான நாங்கள் பரம்பரை பரம்பரையாக 200 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். எனவே எங்களின் குடியிருப்புகளை அகற்றக்கூடாது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளிடமும் மனு அளித்துள்ளோம்.

ஆனால் தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அதிகாரிகள் குடியிருப்புகளை அகற்றுவது எந்த வகையில் நியாயம். வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை நாங்களே அகற்றித் தருகின்றோம்’’ இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இந்த ஆய்வின் போது பூந்தமல்லி தாசில்தார் மாலினி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பொதுப்பணித் திலகம், திருவேற்காடு நகர மன்ற தலைவர் மூர்த்தி, துணைத்தலைவர் ஆனந்தி ரமேஷ், நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் லயன் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post திருவேற்காட்டில் கூவம் நதிக்கரை குடியிருப்புகளை ஜெயக்குமார் எம்பி நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Jayakumar ,Koovam ,Thiruvekkad ,Thiruvekkat ,Perumal Temple Street ,Tiruvekkadu ,
× RELATED ஜெயக்குமார் ஆரூடம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி